பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயராது என்று மந்திரி ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் நேற்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் பொதுத் துறை வங்கிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் ப.சிதம்பரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வட்டி உயராது
வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாமல், வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதாச்சாரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் வங்கி தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ரொக்க இருப்பு உயர்த்தப்பட்டு உள்ளதால், வங்கிகள் வழங்கும் கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
எனவே பொதுத்துறை வங்கிகளின் கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயராது என்று நம்புகிறேன்.
விவசாயிகளுக்கு கடன்
வீட்டுக் கடன் கொள்கையில் ரிசர்வ் வங்கி சில மாற்றங்களை செய்து உள்ளது. இதன்மூலம் வங்கிகள் தற்போது ரூ.50 லட்சம் வரை எளிதாக கடன் வழங்க முடியும். எனவே வீட்டுக் கடனுக்கான வட்டியில் எந்த மாற்றமும் இல்லாமல் அதிக அளவில் வீட்டுக் கடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேவாதேவிகாரர்களிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் விவசாயிகள் அல்லல்படுகின்றனர். இந்த பிரச்சினையில் இருந்து விவசாயிகளை மீட்க, அவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் முடி திருத்துதல், சலவை போன்ற சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சலுகை வட்டியில் அந்த இடங்களில் உள்ள வங்கி கிளைகள் கடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.