ஒப்பந்தம் உள்பட எந்தவொரு பிரச்னையானாலும் பேசித் தீர்க்கத் தயாராக உள்ளோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
ஆதரவுக் கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் எல்லாப் பிரச்னைகள் குறித்தும் பேசத் தயாராக உள்ளோம் என்றும் அவர் கூறினார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.
இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரி கட்சிகளுடன் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்துகிறது.
இந்திய அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து சர்வதேச அணுசக்தி ஆணையத்துடன் செய்து கொள்ளவிருக்கும் ஒப்பந்தம் குறித்து இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்த இடதுசாரிகள் - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது இது எட்டாவது முறையாகும். ஆனால், தற்போதைய நிலையில் அணுஉலை பாதுகாப்பு ஒப்பந்த விவரங்கள் குறித்து எங்களிடம் முறைப்படி ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
ஒப்பந்த விவரங்கள் எங்களுக்குத் தெரிந்தால்தான் அது எங்களது சந்தேகங்களுக்கு தீர்வளிப்பதாக உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து சர்வதேச அணுசக்தி ஆணையத்துடன் செய்து கொள்ளவுள்ள ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு எங்களிடம் என்ன சொல்கிறதோ அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் முடிவு செய்வோம் என்றார் அவர்.
அணு உலை பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து சர்வதேச ஆணையத்துடன் இந்திய அரசு ஏற்கெனவே பேசி முடித்துவிட்டது. ஆனால் ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை. இடதுசாரிக் கட்சிகள் ஒப்புதல் அளித்தால்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும். ஒப்புதல் பெறமால் கையெழுத்திட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும் ஆபத்து உள்ளது.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டுமானால் அணு உலை பாதுகாப்பு தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியம்