முதலமைச்சர் பொறுப்பேற்க, அமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாராகி விட்டதாக அரசியல் வட்டாரங்களில் எழுந்த பேச்சு, திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொழில் துறை - தொழில் நுட்பவியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தத் துறைக்கு முதல்வர் கருணாநிதி பொறுப்பு வகிக்கிறார்.
துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு கருணாநிதி பதிலளிப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், முதல்வரின் மகனும், ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிட்டார்.
தொழில் துறை, உள் துறை ஆகிய முக்கிய துறைகள் முதல்வர் கருணாநிதியின் கைவசம் இருந்தன. தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்ததன் வாயிலாக அவர் அந்தத் துறையின் பொறுப்பை விரைவில் ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, முதல்வரின் வசம் உள்துறை மட்டுமே இருக்கும்.
எப்போது அறிவிப்பு வெளியாகும்...? நெல்லையில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாநாட்டில், முதல்வர் பதவியை ஸ்டாலினிடம் கருணாநிதி அளிப்பது பற்றி அறிவிப்பு வெளியாகும் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. மாநாட்டில் நிறைவுரையாற்றிய முதல்வர் கருணாநிதி, ""காலம் அதிகம் இருக்கிறது. நீங்கள் (பத்திரிகையாளர்கள்) எதிர்பார்ப்பது நடக்கும். எப்போது நடக்கும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். ஸ்டாலினுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்துள்ளேன். அவர் எனக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வார் என நம்புகிறேன். தந்தை வழியில் நடப்பேன் என சொல்வது மட்டுமல்ல; அந்த வழியில் நடந்து காட்ட வேண்டும். இவனைப் பெறுவதற்கு தந்தை என்ன தவம் செய்தாரோ என மற்றவர்கள் கூறும் நிலைக்கு உருவாக வேண்டியது மகனின் கடமை. அதை ஸ்டாலின் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு'' என்றார். முதல்வரின் இந்தப் பேச்சால், முதல்வர் பதவி ஸ்டாலினுக்கு அப்போது இல்லை என்பது தெளிவானது.
""இளைஞர் அணி மாநாட்டைத் தொடர்ந்து, அரசு சார்பிலான பல்வேறு விஷயங்களில் தன் சார்பாக ஸ்டாலினை முன்னிறுத்தி வருகிறார் கருணாநிதி. இதன் மூலம், பொறுப்புகளின் தன்மையைப் புரிந்து கொண்டு ஸ்டாலின் செயல்படுவதை கூடவே இருந்து கவனித்து வருகிறார். அவர் செய்யும் செயல்களில் தவறு இருப்பின் உடனடியாகத் திருத்துகிறார். இப்படி, தன்னுடைய நம்பிக்கையைப் பெற வைக்க ஸ்டாலினுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருவதன் ஒரு பகுதியாகவே தொழில் துறை மானியக் கோரிக்கைக்கு ஸ்டாலின் பதிலளித்துள்ளார்'' என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.
தற்போது நிகழும் மாற்றங்களின் உச்ச கட்டமாக, ஸ்டாலினிடம் முதல்வர் பொறுப்பை கருணாநிதி விரைவில் ஒப்படைப்பார் என்ற கருத்து நிலவுகிறது.
தவறிய ஸ்டாலின், திருத்திய கருணாநிதி
சென்னை தரமணியில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்கா திறப்பு விழா தொடர்பாக, அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்த தகவலைத் திருத்திக் கூறினார் முதல்வர் கருணாநிதி.
தொழில்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு அமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துப் பேசும் போது, ""தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை (ஐ.டி. பூங்கா) முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்'' என்றார்.
பேரவையில் ஸ்டாலினுக்கு அருகில் இருந்த முதல்வர் கருணாநிதி, உடனடியாக அதை திருத்திக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, பேசிய மு.க.ஸ்டாலின், ""முதல்வர் கருணாநிதி தலைமையேற்க, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தகவல் தொழில்நுட்பப் பூங்காவைத் திறந்து வைத்தார்'' என்றார்.
மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு, தன்னுடைய வாரிசு எப்படி பதில் அளித்தார் என்பதை கருணாநிதி உன்னிப்பாகக் கவனித்து வந்ததைக் காட்டுவதாக இது அமைந்தது.