3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-3 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது.
மூன்றாவது சோதனை
இந்திய ராணுவத்தில் சேர்க்கும் விதமாக பல்வேறு ஏவுகணை சோதனைகளை `பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அக்னி-3 ஏவுகணை சோதனையை கடந்த 2006 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் இரண்டு முறை நடத்தியது. அதில் 2-வது சோதனை மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஏவுகணையின் திறன் மேலும் அதிகரிக்கப்பட்டு ஒரிசா மாநிலம் பலசோர் அருகே உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் நேற்று 3-வது சோதனை நடைபெற்றது. காலை 9.56 மணிக்கு ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிற புகையை கக்கிக் கொண்டு அக்னி-3 ஏவுகணை விண்ணில் பாய்ந்தது.
போர் கப்பல்கள் கண்காணிப்பு
இந்த ஏவுகணை தரையில் உள்ள கம்ப்ïட்டர் மற்றும் ரேடார், எலக்ட்ரோ சிஸ்டம் போன்றவை மூலமாக வழி நடத்திச் செல்லப் பட்டது. இது தவிர கடலுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு போர் கப்பல்களும் அக்னி-3 ஏவுகணையை கண்காணித்துக் கொண்டு இருந்தது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரிவான சோதனை முடிவுகளுக்காக அதிகாரிகள் எதிர் பார்த்துள்ளனர். வழக்கமாக ராணுவத்தில் ஒரு ஏவுகணைணை சேர்க்கும் முன்பாக மூன்று சோதனைகள் மட்டுமே நடத்தப்படும். ஆனால் முதல் சோதனை தோல்வி அடைந்ததால் அக்னி-3 ஏவுகணையில் மேலும் சில சோதனைகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அணு ஆயுதம்
16 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்ட அக்னி-3 ஏவுகணை, 40 டன் எடை கொண்டது. மேம்படுத்தப்பட்ட திறனைக் கொண்ட இந்த ஏவுகணை, 3 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கும் அதிகமான தூரத்தை சென்று தாக்கும் சக்தி வாய்ந்தது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வசதியும் உள்ளது.
உதாரணமாக, இந்தியாவில் இருந்து புறப்பட்டு சீன தலைநகர் பீஜிங் வரையிலும் சென்று தாக்கும் சக்தி வாய்ந்தது, இந்த ஏவுகணை. பாகிஸ்தான் தயாரித்துள்ள `கோரி' என்ற ஏவுகணைக்கு ஈடு கொடுக்கும் வகையில் அதைவிட சக்தி வாய்ந்ததாகவும் இது அமைந்துள்ளது.