தா.கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேரையும் விடுதலை செய்து சித்தூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
கடந்த 2002 மே 20 ம் தேதியன்று திமுக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன், மதுரையில் உள்ள அவரது வீட்டின் முன்னர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தமிழக முதலமைச்சரும் , திமுக தலைவருமான கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, தற்போதைய மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இந்த வழக்கு விசாரணையில் நீதி கிடைக்காது என்றும், வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரி தா.கிருட்டிணன் தம்பி ராமையா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததையடுத்து, இவ்வழக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இஅதனையடுத்து கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் தொடர்ச்சியாக வழக்கு விசாரணை நடந்தது.விசாரணையின்போது மு.க.அழகிரி மற்றும் துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேரும் , வழக்கு விசாரணையின்போது சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
இந்நிலையில், இரு தரப்பு வாதங்களும் முடிவுற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்ததையொட்டி மு.க அழகிரி உள்ளிட்ட 13 பேரும் சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
இந்நிலையில், இவ்ழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி துர்கா பிரசாத், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மு.க.அழகிரி மற்றும் துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேரையும் நிரபராதிகள் என அறிவித்து, வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.
தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த அழகிரி, இவ்வழக்கிலிருந்து தாம் விடுதலை செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
நீதித்துறைக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் , அதிமுக அரசு தன்னைப் பழிவாங்க தொடர்ந்த பொய் வழக்கு இது என்றும் அவர் மேலும் கூறினார்.
இதனிடையே தா. கிருட்டிணன் கொலை வழக்கிலிருந்து அழகிரி விடுதலை செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் மதுரையில் இன்று பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.