சேதுக் கால்வாய் திட்டத்தில் தற்போதைய வழித்தடத்திற்கு மாற்றான வழித்தடத்தை பரிசீலிக்கும்படி இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்திய நடுவண் அரசுக்கு, வியாழனன்று யோசனை ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த யோசனையை பரிசீலிப்பதாக இந்திய நடுவண் அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது சேதுக் கால்வாய் வெட்டப்படும் பாதையின் குறுக்கே இருக்கும் மணல் திட்டுக்களை ராமர் பாலம் என்று இந்து அமைப்புகள் வாதாடும் நிலையில், அதன் ஒரு பகுதியை அப்புறப்படுத்துவது என்பது இந்துக்களின் மத நம்பிக்கைகளை பாதிப்பதாகும் என்று கூறி அதற்கு எதிராக இந்து அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்துள்ளன.
இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், சேதுக்கால்வாய் திட்டத்தை தாம் எதிர்க்கவில்லை என்றும், ராமர் பாலம் என்று தாம் கருதும் நிலவியல் அமைப்பை பாதிக்காமல் மாற்று வழியில் இந்த கால்வாயை வெட்ட இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வாதாடினார்கள்.
ஆனால், இதற்காக தாம் ஆறு வழித்தடங்களை பரிசீலித்ததாகவும், அவற்றில் தற்போது நடைமுறைப்படுத்தும் வழியே சாத்தியமானது என்றும் அதனாலேயே தற்போதைய இந்த வழித்தடத்தை தாம் தேர்வு செய்ததாகவும் மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டது.
இந்த ஆறு வழிகளில், இரண்டு வழித்தடங்களை இணைத்து, புதிய மாற்று வழியை எதிர்த்தரப்பினர் உச்சநீதி மன்றத்திடம் அளித்தனர். அதன் சாத்தியப்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, மத்திய அரசு தனது பதிலை அளிக்கும் என்று அதன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்