அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரிசி, பருப்பு, உப்பு, சமையல் எண்ணை, காய்கறிகள், பழங்கள் என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது. கட்டுமான பொருட்கள் விலை சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந் துள்ளன. கடந்த சில மாதங் களில் பல மடங்கு விலைகள் உயர்ந்துள்ளன.
நாட்டின் பணவீக்கம் 7.61 சதவீதம் என்று கணக்கிட்டு உள்ளனர். மொத்த விற்பனை விலையை வைத்து இந்த கணக்கீடு செய்துள்ளனர். இடைத்தரகர்கள் விலை, சில்லறை விலை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அப்படி பார்த்தால் 30 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு தன் பங்குக்கு சொத்துவரி, தண்ணீர் வரிகளை உயர்த்தி உள்ளது. பால்விலை உயர்த்தப்பட்டுள்ளது. நிலம் விலை விண்ணை எட்டி உள்ளது. பஸ் கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டுமான பொருள் பல மடங்கு உயர்வு காரணமாக கட்டிட செலவு அதிகமாகி வீட்டு உரிமையாளர்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இதன் விளைவால் அவர்கள் தங்கள் வீடுகளை வாடகைக்கு விடும்போது அதை உயர்த்தி விட்டனர். கடந்த 6 மாதத்தில் வீட்டு வாடகை 2 மடங்கு அதிகமாகி உள்ளது. இதனால் சாதாரண மக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு சாமானிய மக் களின் பிரச்சினை புரியவில்லை. அதை தீர்த்து வைக்கவும் தெரியவில்லை. முன்னுக்குப்பின் முரணான தகவல்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். அத்தியா வசிய பொருட்களின் விலையை குறைக்க முடிய வில்லை. இறக்குமதி பொருள் விலை ஏற்றம், அமெரிக்க கொள்கை, சர்வதேச விலை என்று ஏதேதோ சொல்கி றார்கள். செங்கல்பட்டில் விளையும் புளி, வேதா ரண் யத்தில் உற்பத்தியாகும் உப்பு, நாமக்கல்லில் உற்பத்தியாகும் முட்டை, ஈரோட்டில் விளையும் மஞ்சள் பற்றி சொல்கிறோம். இவற்றை சென்னை, மதுரை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதில் எப்படி விலை ஏற்றம் வந்ததுப
விலை ஏற்றத்தை குறைப்பதாக கூறி மத்திய அரசு எடுத்த எந்த நடவடிக்கையும், பலன் அளிக்கவில்லை. அவர்கள் ஒவ்வொரு தடவை நடவடிக்கை எடுக்கும்போதும் பணவீக்கம் அதிகரித்தபடி இருக்கிறது.
இப்போது தொழில் நிறுவனங்களிடம் விலையை குறையுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள். தொழிற்சாலைகளுக்கு எத்தனையோ சலுகை வழங்கியிருக்கும் நிலையில் அவர் களிடம் இப்படி ஒரு வேண்டுகோள் விடுப்பது நிதி மந்திரியின் பலவீனத்தை காட்டுகிறது.
அவருடைய அறிக்கைகளால் மக்களின் காலி வயிறு நிரம்ப போவதில்லை. அவரும், பிரதமரும் தாங்கள் படித்த பொருளாதார தத்துவத்தை கூறிக் கொண்டிருக்காமல் விலையை குறைக்க முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
விலை ஏற்றத்துக்கு ஆன் லைன் வர்த்தகம், அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் ஆகியவைதான் முக்கிய காரணமாக உள்ளது.
ஆன் லைன் வர்த்தகம் மூலம் பொதுவளத்தை வைத்து சூதாட்டம் நடக்கிறது. எனவே ஆன் லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். வியாபாரிகள் 50 ஆயிரம் டன் வரை இருப்பு வைக்கலாம் என்று இருப்பதை குறைக்க வேண்டும். பதுக்கல் மீது அரசு எந்திரம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் ஏற்றுமதிக்கு தடைவிதிக்க வேண்டும். இவற்றை செய்தால் தானாக விலை குறையும்.
விவசாயத்தால் லாபம் இல்லை என்பதால் விவசாயிகள் அந்த தொழிலை விட்டு வெளியேறி வருகிறார்கள். அவர்களுக்கு உரிய மானியம் வழங்கி விவசாயத்தில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும். உலகமயமாக்கல் என்ற பெயரில் மானிய விஷயத்தில் கண்மூடித்தனமாக நடக்க கூடாது. விவசாய உற்பத்தியை ஊக்கு விக்காவிட்டால் வரும் காலத்தில் பெரும் பிரச்சினை களை நாடு சந் திக்க வேண்டிய நிலை ஏற் படும்.
பெட்ரோல், டீசல், சுங்கவரி, கலால் வரியை குறைக்க வேண்டும். பன்னாட்டு நிறு வனங்கள் சில்லறை வர்த் தகத் தில் ஈடுபடுவதில் நெரி முறைகளை வகுக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை 15 நாட்களுக்கு போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு எடுத்து விலைவாசியை கட்டுப்படுத்த தவறினால் பலவீனமான, ஊழல் நிறைந்த இந்த அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.