தமிழக காவல் துறைக்கு பல்வேறு சலுகைகளை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை இடர்படியாக வழங்கப்பட்டு வரும் ரூ. 120லிருந்து ரூ.180 ஆக உயர்த்தப்படும் என்றும், டிஎஸ்பி, ஏஎஸ்பிக்களுக்கு வழங்கப் படும் இடர்படி ரூ.140லிருந்து ரூ. 210 ஆக உயர்த்தப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
.
காவல் ஆணையம் பரிந்துரையை ஏற்று ஒருசில படிகள் தற்போது உயர்த்தப்பட்டிருப்பதாகவும், 6வது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்றபிறகு மேலும் பல சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
* தமிழ்நாடு அரசு அமைத்த 3வது காவல் ஆணையம் அளித்த அறிக்கையின் படி அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு கடந்த 2 மாதங்களில் 104 பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு அவற்றில் பெருபாலானவற்றை ஏற்கலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி நான் ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை காலி பணியிடங்களை மதிப்பீடு செய்து தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்ய ஆணை வெளியிடும் அதிகாரத்தை டிஜிபிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இருந்து இது நடைமுறைப்படுத்தப் படும்.
* 200910 ஆண்டில் இருந்து காவல்துறைக்கான பணியிடங்கள் நிரப்பப்படும் போது சிறப்பு காவல்படை மற்றும் பிற காவலர் களுக்கு தனித்தனியாக தேர்வு நடத்தி பணியிடங்கள் நிரப்பப்படும்.
* இவ்வாண்டு திருச்சியில் புதிய காவல் பயிற்சி பள்ளி தொடங்கப்படும்
* இனிவரும் காலங்களில் காவலர்களுக்கான ரேஷன் பொருட்களில் எண்ணெய், பருப்பு வகைகளுக்கு 50 சதவிகித மானியம் வழங்கப்படும்.
* தமிழ்நாடு காவல் துறை கருணை கொடை திட்டத்திற்கான அரசின் பங்கு ஆண்டு ஒன்றுக்கு 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.
* படிப்படியாக அனைத்து புறகாவல் நிலையங்களும் முழு அளவிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும்.
* சொந்த கட்டிடம் இல்லாத 273 காவல் நிலையங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் புதிதாக சொந்த கட்டிடங்கள் கட்டித்தரப்படும்.
* காவல் நிலைய வாகனங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர எரிப்பொருள் அளவு 60 லிட்டரிலிருந்து 150 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.
* காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை தற்போது மாதம் ஒன்றுக்கு 120 ரூபாயாக வழங்கப்படும் இடர்படி ரூ.180ஆகவும். துணை கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளருக்கு வழங்கப்படும் இடர்படி ரூ.140லிருந்து ரூ.210ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
* காவலர்களுக்கான சீருடை தையல் கூலி ரூ.150லிருந்து ரூ.250ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* இவ்வாண்டு ராமநாதபுரத்திலுள்ள கீழ்செல்வனூர் உள்ளிட்ட 10 புறகாவல் நிலையங்கள், காவல் நிலையங்களாக மாற்றப்படும்.
* கம்பம், காரைக்குடி, தஞ்சை தெற்கு, பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி, சிதம்பரம் உள்ளிட்ட 15 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.
* சென்னை மாவட்டம் செம்மஞ்சேரியிலும், வேலூர் மாவட்டம் அரியூரிலும் புதிதாக காவல் நிலையங்கள் தொடங்கப்படும்.
* கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரூ.3.80 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டித்தரப்படும்.
* இந்த ஆண்டு 110 கோடி ரூபாய் செலவில் 2 ஆயிரம் காவலர் குடியிருப்புகள் கட்டித்தரப்படும்.
* கலவை, சூரமங்கலம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்கள் புதிதாக அமைக்கப்படும்.
* 6வது ஊதியக் குழு அமலுக்கு வந்தால் தற்போது வழங்கப்படும் சம்பளத்தை விட கூடுதல் சம்பளம் காவலர்களுக்கு கிடைக்கும்.
* சென்னை நகர காவல் துறை ஆணையரகத்தை பிரித்து புறநகர் பகுதிகளுக்கென்று புதிய காவல் ஆணையரகம் ஏற்படுத்தப்படும் என்றார் கருணாநிதி.