ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமலபடுத்துவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஐஐஎம் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ' பான் - ஐஐஎம் அலுமினி ' என்ற சங்கம் , இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது :
கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை , உயர் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று மத்திய அரசு தவறாக அர்த்தம் செய்து கொண்டுள்ளது.
இதன் காரணமாகவே ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துமாறு கடந்த ஏப்ரல் 20 ம் தேதியன்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி டி.எஸ். தாகூர் தலைமையிலான பெஞ்ச் , இது குறித்து நான்கு வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, இம்மனு மீதான அடுத்தக் கட்ட விசாரணையை வருகிற ஜூலை மாதம் 10 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.