தலைவர்கள் சிலைகளை அவமதிப்பு செய்து வகுப்புக் கலவரங்களைத் தூண்ட முயல்பவர்கள் மீது இனி குண்டர் சட்டம் பாயும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
சட்டசபையில் போலீஸ் மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
தலைவர்கள் சிலைகளை அவமதிப்பு செய்து வகுப்பு கலவரங்களைத் தூண்டிவிட முயற்சிப்பவர்கள் இனி குண்டர் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்படுவார்கள். இதற்கு வகைசெய்யும் சட்ட மசோதாவை தயாரித்து நடப்பு கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்.
டாக்டர் அம்பேத்கர் சிலை மற்றும் மதுரையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை சமீபத்தில் அவமதிப்பு செய்யப்பட்டபோது அரசு உடனடியாக செயல்பட்டு ஜாதிக் கலவரங்கள் எதுவும் மூண்டுவிடாமல் தடுத்துவிட்டது.
இதுபோன்று சிலை அவமதிப்புகள் நடக்கும்போதெல்லாம் அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி இரண்டு வகுப்பினர் இடையே மோதலை உருவாக்கி ஜாதிக்கலவரங்களை ஏற்படுத்திவந்தனர்.
இந்தச் சூழ்நிலையை தடுப்பதற்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தை பிரயோகம் செய்ய தனிச்சட்டம் கொண்டுவர அரசு முடிவெடுத்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகுதான் வன்முறை தலைதூக்கியிருப்பதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர். இதுபோன்ற வாக்குவாதங்களால் பிரச்னையை தீர்ப்பதற்கு வழிகிடைக்காது.
இவ்வாறு கருணாநிதி கூறினார். தொடர்ந்து, தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்திருப்பதற்கான ஆதார புள்ளிவிவரங்களை கருணாநிதி பட்டியலிட்டார்.
மேலும், திமுக ஆட்சியில் எல்லாமே நல்ல முறையில் இருக்கிறது என்று குறிப்பிடுவதற்காக இந்த புள்ளிவிவரங்களை தெரிவிக்கவில்லை. எல்லோரும் ஒற்றுமையாகக் கைகோர்த்தால்தான் 'கறுப்பாடுகளை' அழிக்க முடியும். மும்பை, டெல்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களை ஒப்பிட்டால் தமிழகத்தில் குற்றங்கள் குறைவாகவே நடக்கின்றன என்றார் கருணாநிதி.