பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவிய 3 தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. கிராம மக்களை பிணைய கைதிகளாக பிடித்து வைத்திருந்த தீவிரவாதிகளுடன் 11 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
அரசியல் தலைவர் வீடு
வெயில் காலத்தில் பனிக் கட்டிகள் உருகுவதால் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவது அதிகரித்து வருகிறது. இது குறித்து ராணுவ தலைமை தளபதி தீபக் கபூர், ஏற்கனவே எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் தீவிரவாத கும்பல் ஒன்று, ஏராளமான ஆயுதங்களுடன் எல்லையில் உள்ள சம்பா வனப்பகுதிக்குள் ஊடுருவியது.
அவர்களை எல்லை பாதுகாப்பு படையினரும், ராணுவமும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், சம்பா பகுதியில் வசித்த ஹோசியர் சிங் என்ற அரசியல் தலைவர் வீட்டுக்குள் தீவிரவாதிகள் நுழைந்தனர். நேற்று காலை சுமார் 8 மணிக்கு அங்கு புகுந்த தீவிரவாதிகள், வீட்டில் இருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
பத்திரிகையாளர் பலி
இதில் ஹோசியார் சிங், அவரது மனைவி ஷேஷி பல்லா இருவரும் உயிரிழந்தனர். அவரது மகள் பிந்து மற்றும் மாமியார் தர்ஷன் தேவி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் விரைந்து சென்று அதிரடி தாக்குதல் நடத்தினர்.
இந்த என்கவுண்டரை படம் பிடிப்பதற்காக ஒரு ஆங்கில நாளிதழின் புகைப்படக்காரர் அசோக் சோதி என்பவரும் அங்கு சென்றிருந்தார். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது தீவிரவாதிகள் சுட்டதில், நெற்றியில் குண்டு பாய்ந்து புகைப்படக்காரர் அசோக் பலியானார். அதே நேரத்தில், தீவிரவாதிகள் தப்பி ஓடினர்.
பிணைய கைதிகள்
இதையடுத்து ஹோசியார் சிங் வீட்டுக்குள் சென்று ராணுவத்தினர் பார்த்தபோது ஒரு தீவிரவாதி உயிரிழந்து கிடந்தான். மேலும் குண்டு காயங்களுடன் கிடந்த பிந்து மற்றும் தர்ஷன் தேவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சண்டையில் ஒரு சிப்பாய், ஒரு ராணுவ மேஜர் இருவரும் காயம் அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, தப்பியோடிய தீவிரவாதிகளை ராணுவம் விரட்டிச் சென்றது. அப்போது, அருகில் உள்ள ஒரு கிராமத்துக்குள் புகுந்து அங்கு ஒரு வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகள் உள்பட சிலரை பிணைய கைதிகளாக பிடித்து வைத்தனர். உடனே ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு தீவிரவாதிகளும் சுட்டனர்.
11 மணிநேர சண்டை
இந்த சண்டையில் வீட்டுக்குள் இருந்த இரண்டு தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் ஒரு பெண்ணும் உயிரிழந்தார். இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேரை ராணுவம் மீட்டது. காலையில் இருந்து சுமார் 11 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த துப்பாக்கி சண்டைகள் இரவு 7 மணிக்கு முடிந்தது. இரண்டாவது சண்டை மட்டும் சுமார் 7 மணி நேரம் நீடித்தது.
இது, சமீபத்தில் நடைபெற்ற மிகப்பெரிய `என்கவுண்டர்' சம்பவம் ஆகும். இந்த சண்டையில் 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இவர்கள், கடந்த வெள்ளியன்று காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளனர். இது தவிர பத்திரிகை புகைப்படக்காரர் மற்றும் ஒரு ராணுவ வீரர் உட்பட 5 பேர் பலியாகினர்.
10 கிலோ ஆர்.டி.எக்ஸ்.
இதனைத் தொடர்ந்து சம்பா மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டது. மேலும், சில தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என்பதால் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது, 10 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்துகள், 135 ஏ.கே.ரக துப்பாக்கிகள், 3 நவீன கையெறி குண்டுகள், இரண்டு டெட்டனேட்டர்கள் உட்பட ஏராளமான ஆயுதங்களும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையே, ராணுவ மேஜர் ஜெனரல், டி.சவுத்திரி கூறும்போது, `அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காகவும், இந்த ஆண்டு கடைசியில் காஷ்மீரில் நடைபெறும் சட்டசபை தேர்தலை சீர்குலைப்பதற்காகவும் தீவிரவாதிகள் பெருமளவில் ஊடுருவ திட்டமிட்டு இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது' என்றார்.