இந்தியாவில் மேலும் 15 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படும் ஆபத்து உண்டாகும் என்று யுனிசெஃப் (ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் நிதியம்) எச்சரித்துள்ளது.
உலக அளவிலான உணவுப் பொருட்களின் விலையேற்றமே ஊட்டக் குறைவுக்கு முக்கியக் காரணம் என்று கூறும் யுனிசெஃப், தெற்கு ஆசியாவிலேயே இந்தியக் குழந்தைகள் தான் ஊட்டக் குறைவால் வெகுவாக அவதியுறுவதாக கூறியுள்ளது.
அண்மையில் யுனிசெஃப் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில், " இந்தியாவில் ஐந்து வயதுக்கும் குறைவான 48 சதவிகித குழந்தைகள் ஊட்டக்குறைவுடன் உள்ளது. வங்கதேசத்தில் 43 சதவிகித குழந்தைகளும், பாகிஸ்தானில் 19 சதவிகித குழந்தைகளும் இந்தப் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
தற்போது, இந்தியாவில் 5 கோடி குழந்தைகள் ஊட்டக்குறைவுடன் உள்ள நிலையில், 15 முதல் 18 லட்சம் வரையிலான குழந்தைகள் மேலும் பாதிக்கப்படுவர் " என்று தெரிவித்துள்ளது .
இந்தியா தனது உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டியது அவசியம் என யுனிசெஃப் அறிவுறுத்தியுள்ளது.