ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணம் தாங்கள்தான் என்று `இந்தியன் முஜாஹிதீன்’ என்ற அமைப்பு மின்னஞ்சல் மூலம் உரிமை கோரியிருக்கிறது.
புதன்கிழமையன்று, பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் சாஹிபாபாத் நகரில் உள்ள ஒரு தனியார் இணையத் தொடர்பு மையத்திலிருந்து அது அனுப்பப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக, இணையத் தொடர்பு மையத்தின் உரிமையாளரையும், அதன் ஊழியரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்த மின்னஞ்சலில், குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு சைக்கிளின் ஃபிரேம் எண் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் போலீசார் கைப்பற்றிய சைக்கிளி்ன் ஃபிரேம் எண்ணும், அதுவும் ஒன்றாக உள்ளது. மேலும், குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பு அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த சைக்களில் வெடிகுண்டுப் பையுடன் இருக்கும் சைக்கிளுடன் வீடியோ படம் ஒன்றும் மின்னஞ்சல் இணைப்பில் அனுப்பப்பட்டிருக்கிறது.
சர்வதேச அரங்கில், அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால், இந்தியாவில் மேலும் பல சுற்றுலா மையங்களில் இதுபோன்ற குண்டுவெடிப்புக்கள் தொடரும் என்றும் மின்னஞ்சலில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்க, பொடா சட்டம் போன்ற ஒரு சட்டம் தேவை என்று பாஜக தலைவர்கள் ஏற்கெனவே கோரி வருகிறார்கள். பொடா சட்டத்தை ரத்து செய்தது தவறு என்றும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், தீவிரவாதத்தை ஒடுக்க ராஜஸ்தான் அரசு இயற்றிய சட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்காமல் மத்திய அரசு அதைக் கிடப்பில் போட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே வலியுறுத்தினார்.
இதனிடையே, இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர், குண்டுவெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்டார்கள். காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோக்கு ஆறுதல் கூறினார்கள்.
குண்டுவெடிப்பில் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் மூன்று பேரின் வரைபடங்களை போலீசார் வியாழக்கிழமை மாலை வெளியிட்டிருக்கிறார்கள். முன்னரே ஒருவரது வரைபடம் வெளியிடப்பட்டிருந்தது.