முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 17-வது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்தினர்.
ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, தன்னுடைய மகனும், எம்.பி.யுமான ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா ஆகியோருடன் டெல்லியிலுள்ள 'வீர்பூமி' நினைவிடம் சென்றார்.
இந்நினைவிடத்தில், ராஜீவ் காந்தி 1985-ல் ஆற்றிய உரை ஒலிபரப்பப்பட்ட பிறகு, அஞ்சலி கூட்டம் நிறைவடைந்தது.
துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மற்றும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1991-ம் ஆண்டு இதே தினத்தில்தான் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.