காமன்வெல்த் பேங்க் முத்தரப்பு தொடரின் கடைசி லீக் போட்டியில், ஆஸ்திரேலியாவுடன் மோதிய இலங்கை அணி, 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில், மெல்பர்னில் இன்று நடந்த இலங்கை- ஆஸ்திரேலியா இடையிலான கடைசி லீக் போட்டி சம்பிரதாயப் போட்டியாக அமைந்தது.
டாஸ் வென்று முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 221 ரன் எடுத்தது. திலகரத்னே தில்ஷான் அதிகபட்சமாக 62 ரன், கேப்டன் ஜெயவர்த்தனே 50 ரன், சமர சில்வா 35 ரன் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா துவக்கத்தில் அதிரடியாக விளையாடியது. துவக்க ஆட்டக்காரர் கில்கிறிஸ்ட் 50 பந்துகளில் 83 ரன் எடுத்து வலுவான தொடக்கத்தை அளித்தார்.
எனினும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேறியதால், ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. 107 ரன் வரை விக்கெட் இழப்பின்றி அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலியா, 158 ரன்களுக்குள் எட்டு விக்கெட்களை இழந்து திணறியது.
கேப்டன் ரிக்கி பாண்டிங் ஒரு ரன், மைக் ஹசி 5 ரன், ஹட்டின் 7 ரன் எடுத்த நிலையிலும், கிளார்க் மற்றும் சைமண்ட்ஸ் ஆகியோர் ரன் எடுக்காமலும் வெளியேறினர்.
அணியை சரிவில் இருந்து மீட்க கடைநிலை வீரர்கள் பிராட் ஹாக், பிரெட்லீ ஆகியோர் மேற்கொண்ட முயற்சியும் பலிக்கவில்லை. இருவரும் முறையே 21, 31 ரன் குவித்து ஆட்டமிழந்தனர்.
ஆட்டத்தின் 48.1-வது ஓவர் முடிவில் முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இலங்கை தரப்பில் அமரசிங்கே 3 விக்கெட், முரளிதரன், குலசேகரா தலா 2 விக்கெட், ஜெயசூர்யா, மலிங்கா, பெரிரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் 83 ரன் குவித்த கில்கிறிஸ்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.