சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க வீரர்களான கிராம் ஸ்மித் மற்றும் நீல் மெக்கன்சி இணை 414 ரன்கள் எடுத்து, புதிய உலக சாதனை படைத்துள்ளது.
சிட்டகாங்கில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்காவின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இந்த இணை, நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 405 ரன்கள் குவித்தது.
இந்நிலையில், இன்றைய ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களில் 9 ரன்கள் எடுத்து, டெஸ்ட் போட்டிகளில் துவக்க ஜோடியாக அதிகபட்ச ரன்கள் குவித்த இணை என்ற பெருமையை ஸ்மித் மற்றும் மெக்கன்சி பெற்றனர். இதில், ஸ்மித் 231 ரன்களையும், மெக்கன்சி 170 ரன்களையும் குவித்திருந்தனர்.
இதன்மூலம், கடந்த 1956-ம் ஆண்டில் இந்திய துவக்க வீரர்கள் பங்கஜ் ராய் மற்றும் வினூ மங்கத் ஆகியோர் புரிந்த உலக சாதனை முறியடிக்கப்பட்டது. இந்த இணை 413 ரன்கள் குவித்து, இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.