முத்தரப்பு ஒருதினப் போட்டித் தொடரின் முதல் இறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
இந்த வெற்றிக்கு, சச்சின் டெண்டுல்கரின் அதிரடி ஆட்டமும், ரோஹித் ஷர்மாவின் நிதானமான ஆட்டமும் வித்திட்டன.
சிட்னியில் நடந்து முடிந்த இப்போட்டியில், 240 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 45.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து, 42-வது சதத்தைப் பூர்த்தி செய்த சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 120 பந்துகளில் 117 ரன்கள் குவித்தார். அவருக்கு சிறந்த இணையாக விளையாடிய ரோஹித் ஷர்மா 66 ரன்கள் எடுத்தார்.
துவக்க ஆட்டக்காரர் உத்தப்பா 17 ரன்கள் எடுத்தார்; தோனி ஆட்டமிழக்காமல் 12 ரன்கள் எடுத்தார். யுவராஜ் சிங் 10 ரன்களையும், கம்பீர் 3 ரன்களையுமே எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில், ஹோப்ஸ் 2 விக்கெட்டுகளையும், ஹாக் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
ஹைடனின் முயற்சி வீண்!
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஹைடன் சிறப்பாக பேட் செய்து 82 ரன்கள் எடுத்து, ரன் எண்ணிக்கையை ஓரளவு உயர்த்தினார். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக ஹஸ்சே 45 ரன்களையும், சைமன்ட்ஸ் 31 ரன்களையும் எடுத்தனர்.
பிராட் ஹாக் ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுத்தார். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர். (பிரட் லீ - 16, ஹோப்ஸ் - 15, கில்கிறிஸ்ட் - 7, ஜான்சன் (ஆட்டமிழக்கவில்லை) - 6, மைக்கேல் கிளார்க் - 4, பான்டிங் - 1).
இந்திய தரப்பில் பிரவின் குமார் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா, இர்பான் பதான் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் சிறப்பாக பேட் செய்து இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சச்சினுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ஆஸி.க்கு நெருக்கடி!
காமன்வெல்த் பேங்க் ஒருதினப் போட்டித் தொடரின் மூன்று இறுதிப் போட்டிகளில், முதல் போட்டியில் இந்தியா வென்றுள்ளது.
அடுத்த இரு போட்டிகளில் ஒன்றில் வென்றாலே, இக்கோப்பையை இந்தியா கைப்பற்றிவிடும். இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு மிகுதியான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.