இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மீண்டும் இனவெறி சர்ச்சைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
சிட்னியில் நேற்று நடைபெற்ற முதல் இறுதி ஆட்டத்தின்போது, ஆஸ்திரேலிய ரசிகர்களை நோக்கி 'குரங்கு' போல் சேஷ்டை செய்ததாக ஹர்பஜன் மீது குறை கூறப்பட்ட நிலையில், 'இனவெறியை வெளிப்படுத்தும் விதமாக ஹர்பஜனிடம் ஆஸ்திரேலிய ரசிகர்கள் நடந்துள்ளனர்' என்று அந்நாட்டு பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர், 'முடி திருத்தம் செய்து கொள்' என்றும், 'உன் முடியைக் காட்டு' என்றும் ஹர்பஜனை நோக்கி கிண்டல் செய்தததாக 'தி டெய்லி டெலிகிராப்' செய்தி வெளியிட்டுள்ளது.
பவுண்டரி அருகே செல்லும்போதெல்லாம், ஹர்பஜனைக் கடுமையாக வசை பாடியவண்ணம் ரசிகர்கள் இருந்ததாக ஆஸ்திரேலிய பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய வீரர் சைமன்ட்சிடம் இனவெறியை வெளிப்படுத்தும் விதமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான விவகாரங்களின் வடுக்கள் இன்னும் மறையாத நிலையில், இனவெறி சர்ச்சையில் ஹர்பஜன் மீண்டும் சிக்கியுள்ளார்.
சிட்னி மைதானத்தில் ரசிகர்களை நோக்கி 'குரங்கு சேஷ்டை' செய்ததாக வெளியான தகவலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தன்னை கிண்டல் செய்த ரசிகர் கூட்டத்தை ஹர்பஜன் எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.