டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற வேண்டும் என்று விரும்புவதாக இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். அத்துடன் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வசீம் அக்ரமின் சாதனையை முறியடித்த பின்னர் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாகவும் முரளி தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வோர்னின் சாதனையை முறியடித்துள்ள முரளிதரன் வோர்னை பின்பற்றி தாமும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வசீம் அக்ரமின் சாதனையை முறியடிக்க இன்னும் 39 விக்கெட்டுகளே தேவை என்றும் அதை அடைந்த பின் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகப்போவதாகவும் முரளி குறிப்பிட்டுள்ளார்
தற்போது 36 வயதாகும் தாம் அதிக அளவு பந்துகளை வீசி மிகவும் களைப்படைந்திருப்பதாக கூறினார். எதிர்காலத்தில் அறப்பணிகளில் ஈடுபட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.