பிரிஸ்பேனில் நடந்து முடிந்த இறுதிப் போட்டியில், ரசிகர்களைச் சிலிர்பூட்டும் வகையில் ஆஸ்திரேலிய அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா, காமன்வெல்த் பேங்க் முத்தரப்பு ஒருதினப் போட்டித் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய மண்ணில் முதன் முறையாக முத்தரப்பு ஒருதினப் போட்டியை இந்திய கிரிக்கெட் அணி வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில், 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் எந்த அணிக்கு வெற்றி கிடைக்கும் என்று யூகிக்க முடியாத தருணத்தில், 2- மற்றும் 4-வது பந்துகளில் கடைசி இரு விக்கெட்டுகளை இர்பான் பதான் வீழ்த்தி, இந்திய வெற்றியை உறுதி செய்தார்.
ஆஸ்திரேலியாவின் ஹோப்ஸ் 63 ரன்களையும், ஹைடன் 55 ரன்களையும் எடுத்து, தோல்வியைத் தவிர்க்க போராடினர்; ஹஸ்சேவின் 44 ரன்களும், சைமன்ட்ஸ்சின் 42 ரன்களும், அணியின் ரன் எண்ணிக்கையை ஓரளவு உயர்த்தினர்; ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.
ஆட்டநாயகன் பிரவின்!
சிட்னியில் நடந்த முதல் இறுதிப் போட்டியில், சிறப்பாக பந்துவீசிய பிரவின் குமார், இன்றைய இரண்டாவது இறுதியிலும் மிகச் சிறப்பாக பந்துவீசி, ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தியதுடன், 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
வேகப் பந்துவீச்சாளர்கள் ஸ்ரீசாந்த் மற்றும் பதான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
சச்சின் அபாரம்!
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது.
முதல் இறுதியின் வெற்றிக்கு வித்திட்ட சச்சின் டெண்டுல்கர் தனது நிதானமான ஆட்டத்தால் 91 ரன்கள் குவித்து, இப்போட்டியில் அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தினார்.
யுவராஜ் சிங்கின் 38 ரன்களும், தோனியின் 36 ரன்களும் அணிக்கு மேலும் வலு சேர்த்தன. சச்சினுடன் இணைந்து நல்ல தொடக்கத்தைத் தந்த உத்தப்பா 30 ரன்கள் சேர்த்தார். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் பிராக்கென் மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பிரட் லீ, ஸ்டுவர்ட் கிளார்க் மற்றும் சைமன்ட்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்தத் தொடரின் நாயகன் விருது, ஆஸ்திரேலிய அணி பிராக்கெனுக்கு வழங்கப்பட்டது.