பெங்களூர் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதியில், வீனஸ் மற்றும் செரீனா சகோதரிகள் மோதுகின்றனர். இதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ஒற்றையர் கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன. முதலாவது கால்இறுதியில் ஷிண்டர் (சுவிட்சர்லாந்து) மற்றும் அக்குல் அமன்முராடோவா ( உஸ்பெகிஸ்தான்) அகியோர் மோதினர். இதில் 4-6, 6-4 மற்றும் 7-6 (1) என்ற செட் கணக்கில் ஷிண்டர் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில், செர்பியாவின் ஜான்கோவிச்சை, சீனாவின் ஜி யான் 6-3, 3-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதையடுத்து, அரை இறுதிப் போட்டியில் ஷிண்டர் மற்றும் ஜி யான் ஆகியோர் மோதவுள்ளனர்.
மற்றொரு கால்இறுதியில் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், ரஷ்யாவின் வெரா வொனரிவாவை 6-4 மற்றும் 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.
அவரது சகோதரி செரீனா வில்லியம்சும், ரஷ்யாவின் அனஸ்தசியா ரோடினோவாவை 6-1 மற்றும் 6-4 என்ற நேர் செட்டில் தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம், வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள் அரை இறுதியில் மோதவுள்ளனர்.
இதற்கு முன்பு இருவரும் 14 முறை மோதி, தலா 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் மோதும் அரை இறுதிப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.