உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டு களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. 2004-ம் ஆண்டு ஏதென்சில் நடந்தது. இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் மாதம் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கிறது.
ஒலிம்பிக் ஆக்கி போட்டி யில் 12 நாடுகள் விளையாடும். இதில் ஆலந்து, ஸ்பெயின், பெல்ஜியம், ஆஸ்திரேலியா, தென்கொரியா, சீனா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, கனடா ஆகிய 9 நாடுகள் நேரடியாக தகுதி பெற்றன. தகுதி சுற்று மூலம் 10-வது நாடாக நிïசிலாந்து தகுதி பெற்றது.
2-வது தகுதி சுற்று ஆட்டம் சிலி தலைநகர் சாண்டியாகோவில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா, ரஷியா, சிலி, மெக்சிகோ ஆகிய 6 நாடுகள் பங்கேற்றன. இதில் சாம்பியன் பட்டம் பெறும் அணி தகுதி பெற முடியும்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணிக்கு நடந்தது.
இதில் இந்தியா 0-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகர மாக தோற்றது. இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி பெறவில்லை.
ஆட்டத்தின் 4-வது நிமிடத் திலும், 10-வது நிமிடத்திலும் இங்கிலாந்து கோல் அடித்தது. பேரி மிடில்டனும், ரிச்சர்டு மன்டெனும் கோல் அடித்தனர். மிகவும் முக்கியமான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. 5 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக்க தவறி விட்டனர்.
இந்திய ஆக்கி வரலாற்றில் இது மிகவும் மோசமான நாள் ஆகும். 1928-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஆக்கி சேர்க்கப்பட்டது. அன்றில் இருந்து இந்திய ஆக்கி அணி தகுதி பெறாமல் இருந்தது கிடையாது. தற்போது 80 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டது.
இந்தியாவின் தேசிய விளையாட்டு ஆக்கி. ஒரு காலத்தில் ஆக்கி என்றாலே இந்தியா என்று சொல்லும் நிலை இருந்தது. ஒலிம்பிக்கில் 8 முறை சாம்பியன்பட்டம் பெற்ற இந்திய ஆக்கி அணி இன்று தகுதி பெற முடியாமல் போனது மிகவும் வெட்க கேடானது.
தகுதி சுற்றில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றதன் மூலம் இங்கிலாந்து ஒலிம்பிக் போட்டிக்கு 11-வது நாடாக தகுதி பெற்றது. இன்னும் ஒரு நாடு தகுதிபெற வேண்டியுள்ளது.