தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. வங்காளதேசத்துடன் தொடர் முடிந்ததும், இங்கிருந்து நேரடியாக இந்தியாவுக்கு வருகிறது. இந்தியாவுடன் 3 டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது.
இந்த தொடருக்கான 14 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்பதால், ராபின் பீட்டர்சன், பால் ஹாரிஸ் ஆகிய 2 சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். பீட்டர்சன் சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் 33 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
அதிரடி ஆட்டக்காரர் கிப்சுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்ட கிப்சுக்கு, அதே நிலை தொடருகிறது. வங்காளதேசத்துடன் டெஸ்டில் சுமித்தும், மெக்கன்சியும் முதல் விக்கெட்டுக்கு உலக சாதனை படைத்தனர். இதனால் தொடக்க ஜோடியில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
அதிரடி வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ நெல் நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக லாங்க்வெல்த் இடம் பெற்றுள்ளார். வங்காளதேசத்துடன் ஒரு நாள் தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கல்லீஸ், பவுச்சர், நிதினி ஆகிய சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்புகிறார்கள்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் தென்ஆப்பிரிக்க அணி வருமாறு:-
சுமித் (கேப்டன்), பிரின்ஸ், ஹசிம் ஆம்லா, பவுச்சர் (விக்கெட் கீப்பர்), டிவில்லியர்ஸ், டுமினி, பால் ஹாரிஸ், ஜேக்ஸ் கல்லீஸ், லாங்வெல்த், மெக்கன்சி, மோர்னே மோர்கல், நிதினி, ராபின் பீட்டர்சன், டேலே ஸ்டெயின்.