இந்திய கேப்டன் தோனிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆடு பலி கொடுத்தது தொடர்பாக இவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என மிருக வதை எதிர்ப்பு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்திய அணியின் ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாக அசத்தி வருகிறார் தோனி. "டுவென்டி20' உலக கோப்பையை வென்று காட்டிய இவர், ஆஸ்திரேலிய மண்ணிலும் கலக்கினார்.
முத்தரப்பு பைனலில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். கடவுளுக்கு நன்றி: இதற்கு பின் சொந்த ஊரான ராஞ்சிக்கு திரும்பிய தோனி, ஆஸ்திரேலிய மண்ணில் கிடைத்த வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி சொன்னார். நேர்த்திக் கடன்களையும் முறைப்படி செலுத்தினார். முர்ரியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்ற இவர், கையில் புனித நீருடன் அரை கிலோமீட்டர் துõரம் நடந்து போய் வழிபட்டார். இங்குள்ள ராமர், சீதா, அனுமார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் துர்க்கை அம்மன், மாதா தியோரி கோயிலுக்கு சென்று தனது ஆன்மிக கடமையை நிறைவேற்றினார்.
சர்ச்சை வழிபாடு: இப்படி பல்வேறு கோயில்களுக்கு சென்ற தோனி, ஆடு ஒன்றை பலி கொடுத்ததாக கூறப்படுகிறது. இவர் பிறந்த ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி இன மக்கள் அதிகம். இவர்கள் வெற்றியை வேண்டி ஆடு, கோழிகளை பலி கொடுப்பது சகஜம். முத்தரப்பு தொடரின் பைனலில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சில ஆதிவாசிகள் கோழியை பலி கொடுத்தனர். இதே போலத் தான் தோனியும் தற்போது ஆடு பலி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கு அகில பாரதிய ஜீவ ரக்ஷா பிஷ்னோய் சபா(ஏ.பி.ஜே.ஆர்.பி.எஸ்.,) என்ற மிருக வதை எதிர்ப்பு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அநியாயமாக ஒரு மிருகத்தை கொன்றதற்காக இந்திய அணியில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என பி.சி.சி.ஐ., தலைவர் சரத் பவாரை கேட்டுக் கொண்டுள்ளனர்.
சல்மான் கான் சம்பவம்: இது தொடர்பாக பிஷ்னோய் சபாவை சேர்ந்த ராஜ் குமார் பெனிவல் கூறியது: கடவுளுக்கு நேர்த்திக் கடன் என்ற பெயரில், ஆடு ஒன்றை பலி கொடுத்து பாவம் செய்துள்ளார் தோனி. இவரை உடனடியாக இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும். தவறினால் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்படும். நாட்டில் உள்ள மரங்கள், விலங்குகளை காப்பதற்காக பிஷ்னோய் அமைப்பு பாடுபட்டு வருகிறது. எங்களது அமைப்பினர் எழுப்பிய புகாரின் அடிப்படையில் தான், அன்று மான் வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஜெயிலுக்கு செல்ல நேர்ந்தது. இவ்வாறு ராஜ் குமார் கூறினார்.
பி.காம்., படிக்கலாமா?: தோனிக்கு பி.காம்., படிக்க ஆசை வந்துள்ளது. "ஸ்போர்ட்ஸ் கோட்டாவில்' இடம் அளிக்கும்படி ராஞ்சி பல்கலை., விளையாட்டு இயக்குனர் ஜெய்குமாரை சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து புனித சேவியர் கல்லுõரியின் முதல்வர் நிக்கோலஸ் கூறுகையில்,"" தோனி பி.காம்., படிக்க முயற்சிப்பது உண்மை தான். "அட்மிஷன்' தருவதற்கு "ரெடியாக' உள்ளோம். ஆனாலும் கிரிக்கெட்டில் "பிஸியாக' இருப்பதால் இவரால் கல்லுõரிக்கு வந்து படிப்பது சிரமம். எனவே தோனிக்கு ராஞ்சி பல்கலை., சிறப்பு அனுமதி தர வேண்டும்,'' என்றார்.