வெலிங்டனில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு வலுவான இலக்கை நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. இதுவரை 418 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது அந்த அணி. சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களைச் சேர்த்துள்ளது இங்கிலாந்து. காலிங்வுட் 59 ரன்களைச் சேர்த்து ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இங்கிலாந்து அணி இன்னிங்ûஸ "டிக்ளேர்' செய்யவில்லை.
4-ம் நாள் ஆட்டத்திலும், கடைசி விக்கெட்டுக்கு முடிந்த அளவிலான ரன்களைச் சேர்த்துவிடலாம் எனத் திட்டமிட்டுள்ளது அந்த அணி. இதனால் நியூஸிலாந்து தோல்வியைத் தவிர்ப்பது கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது.
விக்கெட் இழப்பின்றி 4 ரன் எனும் முந்தைய நாள் எண்ணிக்கையுடன் சனிக்கிழமை இரண்டாவது இன்னிங்ûஸ தொடங்கியது இங்கிலாந்து. வீரர்களது ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்றாலும் தொடக்க வீரர் அலிஸ்டார் குக் 60 ரன்களும், ஸ்டிராஸ் 44 ரன்களும் இயான் பெல் 41 ரன்களும் சேர்த்து அணிக்கு வலு சேர்த்தனர்.
நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 198 ரன்களைச் சேர்த்தது.
சாதனை இலக்கு: இதுவரை 421 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து. இது, ஏற்கெனவே 4-வது இன்னிங்ஸில் விரட்டிப்பிடித்த சாதனை இலக்கை விஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 418 ரன்களைச் சேர்த்து வெற்றி பெற்றதே சாதனையாக உள்ளது.
ஹாமில்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் 1-0 என நியூஸிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.