தெற்கு ஆஸ்திரேலியா அணியுடன் நடைபெற்ற 20/20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் லெவன் அணி 68 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேப்டன்
தெற்கு ஆஸ்திரேலியா மாநில முதல்வர் மைக்ரான், 23-ந் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவருடன், தொழிலதிபர்கள் அடங்கிய கிரிக்கெட் அணியும் தமிழகம் வந்துள்ளது. அந்த அணிக்கும், தமிழக அமைச்சர்கள், நடிகர்கள் அடங்கிய முதல்-அமைச்சர் லெவன் என்ற அணிக்கும் 20/20 ஓவர் நட்புறவு கிரிக்கெட் போட்டிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்தது. முதல்-அமைச்சர் லெவன் அணிக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
அந்த அணியில், அமைச்சர்கள் பொன்முடி, என்.கே.கே.பி.ராஜா, வெள்ளக்கோவில் சாமிநாதன், பூங்கோதை, கே.பி.பி.சாமி, மதிவாணன் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீகாந்த், எல்.சிவராமகிருஷ்ணன், டி.ஆர்.அரசு, தினேஷ் கார்த்திக், நடிகர்கள் அப்பாஸ், ஸ்ரீகாந்த், ஜீவா, விக்ராந்த், ஜித்தன் ரமேஷ், ஐ.ஏ.எஸ்.அதிகாரி நவ்நீத் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
டாஸ்சில் வெற்றி
தெற்கு ஆஸ்திரேலியா மாநில முதல்வர் மைக்ரான் தலைமையிலான அணியில், பேராசிரியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த இரு அணிகளுக்கும் இடையேயான 20/20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் உள்ள எம்.ஆர்.எப்.பேஸ் பவுண்டேசனில் நேற்று நடந்தது.
டாஸ்சில் வெற்றி பெற்ற அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
தினேஷ் கார்த்திக்
தொடக்க ஆட்டக்காரர்களாக, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி ராஜா ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரின் இரண்டாவது பந்தில், அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா தன் விக்கெட்டை பறி கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து களம் இறங்கிய உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் சந்தித்த முதல் பந்தில் ஒரு ரன்னை எடுத்தார். தினேஷ் கார்த்திக் ஒரு முனையில் பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் விளாசினார். சிறிது நேரத்தில், அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வு பெற்றுக் கொண்டார். தினேஷ் கார்த்திக் 73 ரன்கள் குவித்து ஓய்வு பெற்றார்.
68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
அவரைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் 17 ரன்களும், நடிகர் ஜீவா 44 ரன்களும் குவித்து முதல்-அமைச்சர் அணிக்கு மேலும் வலுசேர்த்தனர். அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் 14 ரன்களும், நடிகர்கள் ஸ்ரீகாந்த் 2 ரன்களும், விக்ராந்த் 7 ரன்களும், ஜித்தன் ரமேஷ் 9 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 17.3 ஓவர்களில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் லெவன் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை குவித்தது.
அடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தெற்கு ஆஸ்திரேலிய அணியினரால் ரன்களை குவிக்க முடியவில்லை. இறுதியில், 20 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் தெற்கு ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தமிழ்நாடு முதல்-அமைச்சர் லெவன் அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பரிசளிப்பு விழா
அதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார். வெற்றி பெற்ற தமிழ்நாடு முதல்-அமைச்சர் அணியின் கேப்டன் மு.க.ஸ்டாலினுக்கு கோப்பையை வழங்கினார்.
இந்த கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை எடுத்த அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த பந்து வீச்சாளராகவும், 73 ரன்கள் குவித்த தினேஷ் கார்த்திக் சிறந்த பேட்ஸ்மேனாகவும், சிறந்த ஆல்ரவுண்டராக தெற்கு ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஸ்டீபன் பெர்சனும், ஆட்ட நாயகன் விருதை அதே அணியை சேர்ந்த ஏ.கே.தரீனும் பெற்றனர்.
பரிசளிப்பு விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் கிறிஸ்துதாஸ் காந்தி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத்தலைவர் எஸ்.குமாரசாமி, உறுப்பினர் செயலாளர் எம்.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.