நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி சமன் செய்துள்ளது.
வெலிங்டனில் நடந்துமுடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 126 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் 438 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 100.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.
அந்த அணியில் அதிகபட்சமாக மெக்கலம் 85 ரன்களையும், டெய்லர் 55 ரன்களையும் எடுத்தனர். சின்கிளைர் 39 ரன்களையும் பிளெமிங் 31 ரன்களையும் சேர்த்தனர். ஓரம் 30 ரன்களையும், பெல் 29 ரன்களையும் எடுத்தனர். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.
முன்னதாக இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸ்சில் 342 ரன்களையும் (ஆம்ப்ரோஸ்-102), இரண்டாவது இன்னிங்ஸ்சில் 293 ரன்களையும் (குக்-60, காலிங்வுட்-59 ) எடுத்தது. நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸ்சில் 198 ரன்களை (டெய்லர்-53, விட்டோரி-50*) மட்டுமே எடுத்தது.
இப்போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆம்ப்ரோஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, நேப்பியரில் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.