மெல்போர்னில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆஸ்திரேலிய ஃபார்முலா-1 கிராண்ட் பிரீ கார் பந்தயத்தில் 23 வயது பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடத்தைப் பிடித்தார். 5.3 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட மெல்போர்ன் அல்பர்ட் பார்க் ஓடுதளத்தை 58 முறை காரில் சுற்ற வேண்டும்.
இப் போட்டியில் விஜய் மல்லையாவின் ஃபோர்ஸ் இந்தியா குழு (கியான் கார்லோ ஃபிஷிசெல்லா, அட்ரியன் சுடில்) உள்ளிட்ட 22 பேர் போட்டியிட்டனர். ஆனால் 7 பேர் மட்டுமே மொத்த தூரத்தைக் கடந்தனர். மற்றவர்கள் இலக்கை எட்டாமல் பாதியில் விலகினர்.
ஜெர்மனியின் நிக் ஹெய்ட்பெல்டு இரண்டாம் இடத்தையும், நிகோ ராஸ்பெர்க் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இரண்டாவது போட்டி: மொத்தம் 18 போட்டிகளைக் கொண்டது இத் தொடர். அவற்றில் அதிகமான புள்ளிகளைச் சேர்க்கும் வீரர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெறுவார். இரண்டாவது போட்டி (மலேசியன் கிராண்ட் பிரீ) கோலாலம்பூரில் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.