சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலின் அடுத்த தலைமை நிர்வாகியாக தென்னாபிரிக்காவின் இம்டியாஸ் படேல் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதன்படி சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலின் தலைமை நிர்வாகியாக செயல்பட்டுவரும் மல்கம் ஸ்பீட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ளது.
இதனைத்தொடர்ந்து மேற்படி பதவியை தென்னாபிரிக்க செய்தி ஒலிபரப்பு நிறுவனமான சுப்பர் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இம்டியாஸ் படேல் பெறுப்பேற்கவுள்ளார்.
அத்துடன் இந்திய கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் ஐ.எஸ்.பிந்த்ரா சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலின் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளார். நேற்று டுபாயில் கூடிய சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலில் செயற்குழு கூட்டத்தின் முடிவில் இந்த அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டது. ஐ.சி.சி. தலைவர் ரே மாலி, டேவிட் மோர்கன், கிரிக்கெட் அவுஸ்திரேலியா தலைவர் ஓ கோனர், இந்திய கிரிக்கெட் சபை தலைவர் ஷரத் பவார் ஆகியோர் அடங்கிய ஐ.சி.சி. துணைக்குழு இம்டியாஸ் படேல், ஐ.எஸ். பிந்த்ரா ஆகியோரை தேர்வுசெய்துள்ளது.
முதலில் மல்கம் ஸ்பீட்டுக்கு பதிலாக ஐ.எஸ். பிந்த்ராவை இந்திய கிரிக்கெட் சபை பலமாக பரிந்துரை செய்துள்ளது. ஆனால் ஐ.சி.சி. இல் இந்திய பலம் அதிகரிக்கும் என்று ஏனைய உறுப்பு நாட்டு சபைகள் கவலை தெரிவித்ததால் இம்டியாஸ் படேலை தேர்வு செய்ததாக ஐ.சி.சி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்டியாஸ் படேல் இந்திய வம்சாவழியைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.