நேப்பியரில் இன்று தொடங்கிய நியூசிலாந்துக்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்டில், பீட்டர்சனின் அபார சதத்தால் சரிவில் இருந்து இங்கிலாந்து அணி மீண்டது.முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருந்தது. பிராட் 42 ரன்களுடனும், சைடுபாட்டம் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக இருந்தனர்.
துவக்க வீரர்கள் குக், வான் ஆகியோர் தலா 2 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி அளிக்க, ஸ்டிராஸ் வந்த வேகத்தில் 'டக்-அவுட்' ஆகி பெவிலியன் திரும்பினார். பெல் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருக்க மறு முனையில் பீட்டர்சன் நிதானமாகவும், சிறப்பாகவும் பேட் செய்து ரன்களை குவித்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்த அவர், 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த காலிங்வுட் (30), அம்புரோஸ் (11) ஆகியோர் நிலைத்து ஆடவில்லை. 92 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருந்தது.
நியூசிலாந்து தரப்பில் டிம் சுதி 3 விக்கெட்டுகளையும், ஜீடேன் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.