வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை இளம் வீரர் வர்னபுரா அபார சதம் அடித்துள்ளார். இலங்கை அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கயானாவில் நேற்று தொடங்கியது.
இலங்கை அணி முதலில் ஆடத் தொடங்கி ஆட்டநேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. துவக்க வீரராக களமிறங்கிய மலிந்தா வர்னபுரா அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது அவரது முதல் சதமாகும்.
மற்றொரு துவக்க வீரரான வான்டாட் 52 ரன்கள் எடுத்தார். சங்ககாரா அரை சதம் அடித்தார். ஒரு கட்டத்தில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்திருந்த இலங்கை கடைசி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஜெயவர்த்தனே மற்றும் தில்ஷன் களத்தில் உள்ளனர்.