சீனாவில் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி துவங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடர் ஓட்ட ஜோதி, கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் பாரம்பரிய முறைப்படி இன்று ஏற்றப்பட்டது.அடுத்த 5 மாதத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளுக்கு தொடர் ஓட்டம் மூலம் கொண்டு செல்லப்படும் இந்த ஜோதி, ஆகஸ்ட் 8ம் தேதி பீஜிங் நகரை அடையும் என ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
ஒலிம்பியாவில் உள்ள ஹீரா (Hera) கோயிலில் இன்று நடந்த நிகழ்ச்சியில், அந்நாளில் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிய பெண் பூசாரிகள் போல் வேடமணிந்த நடிகை மரியா நப்லியோடோ (Maria Nafpliotou) உள்ளிட்ட பெண்கள், பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினர்.
கிரேக்க ஒலிம்பிக் வீரர் அலெக்சான்ரோஸ் நிகோலைடிஸ் (Alexandros Nikolaidis) ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டத்தை துவக்கி வைத்தார்.
அந்நாட்டில் மொத்தம் 6 நாள் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் நடைபெறும் என்றும், வரும் 30ம் தேதி இந்த ஜோதி சீனர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.