கலிபோர்னியாவின் இண்டியன்வெல்ஸில் நடந்து வந்த பசிபிக் லைப் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் பிரிவு ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை செர்பிய வீராங்கனை அனா இவானோவிக் வென்றுள்ளார்.
கடந்த 13ம் தேதி துவங்கிய பெண்கள் பிரிவு ஒற்றையர் பிரிவின் பரபரப்பான இறுதி ஆட்டம் நேற்றிரவு நடந்தது. ரஷ்ய வீராங்கனை ஸ்வெட்லனா குஸ்நெட்ஸோவா உடன் மோதிய இவானோவிக் 6-4, 6-3 என்ற செட்கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
முன்னதாக இத்தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் சக நாட்டு வீராங்கனை ஜெலினா ஜான்கோவிக் உடன் மோதிய இவானோவிக், 7-6, 6-3 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பசிபிக் ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் சர்வதேச தரவரிசையில் 2ம் இடத்தை தக்க வைத்துக் கொண்ட இவானோவிக், இப்பட்டத்தை வென்ற முதல் செர்பிய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.