ரசிகரை தாக்கிய பங்களாதேஷ் அணித்தலைவர் மொஹ மட் அஷ்ரபுல்லுக்கு அந்நாட்டுகிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது. தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடரில் சோபிக்க தவறிய மொஹமட் அஷ்ரபுல்லை அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர் ஒருவர் பயிற்சியின்போது திட்டியுள்ளார். இதன்போது அஷ்ரபுல் ஒரு குப்பை என அந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கோபமடைந்த அஷ்ரபுல் மேற்படி ரசிகரை தாக்கியுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மொஹமட் அஷ்ரபுல் மீது ஒழுக்க விசாரணை நடத்திய பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, அவர் இம்மாதம் பெறும் சம்பளத்தில் இருந்து 25 வீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என விதித்துள்ளது. இதன்போது இந்த சம்பவம் குறித்து மொஹமட் அஹ்ரபுல் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணி 03 என்ற கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதில் பங்களாதேஷ் அணித்தலைவராக செயற்படும் அஷ்ரபுல் மூன்று போட்டிகளிலும் மொத்தமாக வெறும் 17 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.
இதேபோன்று பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்களான மோர்தஸா, சயிட் ரஸல் மற்றும் அப்துல் ரஸ்ஸாக் ஆகியோர் அனுமதியின்றி உள்ளூர் போட்டிகளில் ஆடியதற்காக அவர்களுக்கு இந்த மாத சம்பளத்தில் 20 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்துடனான ஒருநாள் தொடரின்போது ரசிகர்களை நோக்கி மோசமான செய்கை காட்டிய சஹ்தாத் ஹொஸைன் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.