பிரான்ஸீக்கு எதிரான நட்புறவு கால்பந்து போட்டியில் இங்கிலாந்து 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றுப் போனது. நட்சத்திர வீரர் டேவிட் பெக்காமுக்கு 100-வது போட்டி என்பதால், உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது. ஆனால், அவரது அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது.
பாரீஸில் உள்ள செயின்ட் டெனிஸ் மைதானத்தில் புதன்கிழமை இப் போட்டி நடைபெற்றது. பெனால்டி கார்னர் வாய்ப்பு முயற்சியில் பிரான்ஸ் வீரர் பிராங்க் ரைபெரி அடித்த கோல், அந்த அணிக்கு வெற்றியைத் தந்தது.
லா காலக்ஸி அணியில்: 32 வயதாகும் பெக்காம், மேஜர் லீக் கால்பந்து போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த லா காலக்ஸி அணிக்கு விளையாடி வருகிறார். அதற்காக பல கோடிகளை அவர் ஊதியமாகப் பெற்றுள்ளார். காயம் காரணமாக குறைவான போட்டிகளில் அவர் பங்கேற்றார். அவரது ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இதனால் ரசிகர்கள் அவர் மீது அதிருப்தி அடையத் தொடங்கினர்.
இந் நிலையில் தனது தாயகத்துக்காக (இங்கிலாந்து) விளையாடிய 100-வது போட்டியும் ஏமாற்றத்தில் முடிந்துள்ளது.
பீலே பாராட்டு: நூறாவது போட்டியில் விளையாடிய பெக்காமுக்கு போட்டிக்கு முதல் நாளான செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவித்தார் பிரேசில் ஜாம்பவான் பீலே.
அவர் கூறியது:
தலைசிறந்த வீரர் என்ற பேச்சு எழும்போது, அவர் ஆடுகளத்திலும் அதற்கு வெளியிலும் சிறந்த குணாதிசயங்களுடன் இருப்பதைக் காணமுடியாது. இங்கிலாந்தில் தனிச்சிறப்பு வாய்ந்த வீரர்கள் பலர் இருக்கலாம். ஆனால் பெக்காமின் நடத்தையைக் கவனித்துள்ளேன். ஆட்டக்களத்திலும் பார்த்துள்ளேன். இளைஞர்களுக்கு அவர் உதாரணமாகத் திகழ்கிறார்.
கோல் போடுவதை மட்டுமே பெக்காமிடம் பலர் எதிர்பார்க்கின்றனர். அது அவர்களது தவறு. ஆனால் அணியின் வெற்றிக்காக அவர் எந்த அளவுக்கு உறுதுணையாகச் செயல்படுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். அவர் களத்தில் மட்டுமல்ல, வெளியிலும் கால்பந்தாட்டத்துக்கு கிடைத்த சிறந்த தூதர் என்றார் பீலே.
கால்பந்து ஜாம்பவான்களில் முதன்மையானவராக போற்றப்படுபவர் பீலே என்பது குறிப்பிடத்தக்கது.