மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சேவாக் தலைமையிலான தில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 4 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியளித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
கடந்த 3 நாள்களில் பஞ்சாப் அணி பெறும் 2-வது வெற்றி இது. அதே சமயம் தில்லி அணி இத் தொடரில் சந்திக்கும் முதல் தோல்வி. ஏற்கெனவே 2 போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்ற தில்லி அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. அதன்படி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது.
அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 3 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை எட்டி வெற்றி கண்டது.
சைமன் காடிச் அபாரம்: கோயலும், சைமன் காடிச்சும் பஞ்சாப் அணியின் இன்னிங்ûஸத் தொடங்கினர். வி.ஆர்.வி. சிங் வீசிய பந்தில் ஒரே ரன்னில் கோயல் ஆட்டமிழந்தார். அதே நேரம் காடிச் நிலைத்து ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். தில்லி பந்து வீச்சாளர்களின் பொறுமையை மிகவும் சோதித்த அவர் 75 ரன்களைச் சேர்த்திருந்தபோது, கேப்டன் யுவராஜ் சிங்குடன் களத்தில் நிகழ்ந்த குழப்பத்தில் ரன் அவுட் ஆனார்.
அவர் எதிர்கொண்ட 52 பந்துகளில், 11 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசினார்.
14-வது ஓவரில் காடிச் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 119. அதன் பிறகு யுவராஜ் சிங் நிலைத்து ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இவர், 29 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 40 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
திவாரி 39: முன்னதாக ஆடிய தில்லி அணியில் கேப்டன் சேவாக் 6 ரன்களில் ஆட்டமிழந்தது, அந்த அணிக்கு கடுமையான ஏமாற்றத்தை அளித்தது. மற்றொரு தொடக்க வீரர் கம்பீர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அணியிலேயே அதிகபட்சமாக மனோஜ் திவாரி 39 ரன்களைக் குவித்தார்.
பஞ்சாப் தரப்பில் வி.ஆர்.வி. சிங் 3 விக்கெட்டுகளையும், பதான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சைமன் காடிச் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
சுருக்கமான ஸ்கோர்:
தில்லி டெவில்ஸ்: 20 ஓவர்களில் 158-8வி (கம்பீர் 18, சோயப் மாலிக் 19, திவாரி 39, தினேஷ் கார்த்திக் 24, மஹ்ரூப் 18, வி.ஆர்.வி. சிங் 3-29, பதான் 2-26).
பஞ்சாப் கிங்ஸ்: 19.3 ஓவர்களில் 162-6வி (காடிச் 75, ஜயவர்தனே 15, யுவராஜ் சிங் 40 நாட் அவுட், முகமது ஆசிப் 2-39).