இந்திய ஹாக்கி சம்மேளனத்தை அதிரடியாக கலைத்துள்ளது இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ). ஹாக்கி சம்மேளனத்தின் செயலாளராக இருந்த ஜோதிகுமரன், வீரரைத் தேர்வு செய்ய லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து சம்மேளனத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து, இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் அவசரமாக கூடி தில்லியில் திங்கள்கிழமை பிரச்னையை விவாதித்தனர்.
கூட்டத்தில், இந்திய ஹாக்கி சம்மேளனத்தை கலைத்துவிட்டு, இடைக்காலக் கமிட்டி அமைப்பது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதனால் 15 ஆண்டுகாலம் சம்மேளனத்தின் தலைவராக இருந்த பஞ்சாப் காவல்துறை முன்னாள் டிஜிபி கே.பி.எஸ். கில், பதவிலியிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.
இடைக்கால குழு: சம்மேளனத்தை நிர்வகிக்க இடைக்கால கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஒலிம்பிக் வீரர் அஸ்லம் ஷெர்கான் தலைமையிலான 5 பேர் குழுவில், ஹாக்கி ஜாம்பவான்கள் அசோக் குமார், தன்ராஜ் பிள்ளை, அஜித்பால் சிங், ஜாஃபர் இக்பால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கூட்டத்துக்குப் பின்னர் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாதி கூறியது:
வேதனையான முடிவு: இந்திய ஹாக்கி சம்மேளனத்தை உடனடியாகக் கலைப்பது என்பது மிகவும் வேதனையான முடிவு. இருந்தாலும் ஊழல் பிரச்னையில் சம்மேளனம் சிக்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏகமனதாக இம்முடிவை மேற்கொண்டுள்ளது.
முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள், கேப்டன்கள் மற்றும் இந்திய ஹாக்கி வளர்ச்சிக்கு பாடுபட்டோர் பலரது கருத்துகளைக் கேட்டபின்னர் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கில் பங்கேற்பு: ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் கே.பி.எஸ். கில்லும் கூட்டம் முழுவதும் இருந்தார். அவர் மீது ஐஓஏ-வுக்கு மிகவும் மரியாதை உண்டு. ஆனால் தனிப்பட்ட விதத்தில் அல்ல. ஹாக்கி சம்மேளனத்தை கலைப்பது என்பது ஏகமனதான முடிவு. அதற்கு எதிராக கூட்டத்தில் பங்கேற்ற யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.
லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் ஜோதிகுமரன் கருத்தையும் கேட்க இருந்தோம். ஆனால் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றார் கல்மாதி.