இந்தியன் பிரீமியர் லீக்கின் 16-வது இருபதுக்கு 20 போட்டியில், கோல்கத்தாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது.
கோல்கத்தாவில் நடைபெற்ற இப்போட்டியில், 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.
அந்த அணியில் ஆட்டமிழக்காமல் பிராவோ 64 ரன்களையும், உத்தப்பா 37 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஜெயசூர்யா 18 ரன்களையும், ரகனா 4 ரன்களையும் எடுத்தனர்; பாண்டே ரன் ஏதும் எடுக்கவில்லை.
கோல்கத்தா தரப்பில் அகார்க்கர், இஷாந்த் ஷர்மா மற்றும் திண்டா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
முன்னதாக, கோல்கத்தா அணி தனது இன்னிங்ஸ்சில், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக சுக்லா ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்தார்; தாஸ் 29 ரன்களையும், பான்டிங் 19 ரன்களையும் எடுத்தனர். ஹஸ்சே 17 ரன்களையும், முரளி கார்த்திக் 10 ரன்களையும் எடுத்தனர்.
மும்பை அணி தரப்பில் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளையும், பொல்லாக் 2 விக்கெட்டுகளையும், ஃபெர்ணாண்டோ மற்றும் பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இப்போட்டியில், 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்து, 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை அணியின் ஜெயசூர்யாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.