ஐ.பி.எல்., தொடரில் அசைக்க முடியாத அணியாக இருந்த தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் தோல்வியை சந்தித்தது. நேற்றைய லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக வீழ்ந்தது. அதிரடியாக விளையாடி வெற்றி பெற்ற கேப்டன் சேவக், தனது டில்லி அணியை முதலிடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். சென்னை அணி தற்போது இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் "டுவென்டி20' தொடர் நாட்டின் பல்வேறு நகரங் களில் நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த முக்கிய லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சேவக் கின் டில்லி டேர்டெவில்ஸ் அணியை சந்தித்தது. "டாஸ்' வென்ற தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
வந்தார் நிடினி: சென்னை அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆஸ்திரேலியாவின் ஹைடன், ஹசி மற்றும் நியூசிலாந்தின் ஓரம் ஆகியோர் தங்களது தேசிய அணிக்காக விளை யாட சென்றுவிட்டதால், பிளமிங், வித்யூத் சிவராம கிருஷ்ணன், நிடினி வாய்ப்பு பெற்றனர். பழனிக்கு பதிலாக முரளிதரன் இடம்பிடித்தார்.
மெக்ராத் அசத்தல்: துவக்க வீரர்களாக பார்த்திவ், பிளமிங் களமிறங்கினர். மிகவும் கஞ்சத்தனமாக பந்துவீசிய மெக்ராத் ஆரம்பத்திலேயே மிரட்டினார். முதல் இரண்டு ஓவர்களில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஹைடனின் இடத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப் பட்ட பிளமிங் 13 ரன்களுக்கு மகேஷ் பந்தில் வீழ்ந்தார். பார்த்திவ் 21 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
வித்யூத் அரைசதம்: இந்நிலையில் களமிறங்கிய கேப்டன் தோனி, வித்யூத் சிவராமகிருஷ்ணனுடன் ஜோடி சேர்ந்தார். சூப்பராக பேட் செய்த இந்த ஜோடி டில்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. சேவக் வீசிய 11வது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்சர் அடித்து அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயர்த்தினர். முன்னாள் வீரர் சிவராமகிருஷ்ணன் மகனான வித்யூத் 31வது பந்தில் அரைசதம் கடந்தார். 54 ரன்கள் எடுத்த இவர் மெக்ராத் பந்தில் அவுட்டானார்.
தோனி "32': அடுத்து வந்த ஆல்பி மார்கல், மெக்ராத் வேகத்தில் பவுண்டரி அடித்து அசத்தினார். மறுமுனையில் அதிரடியாக பேட் செய்ய முயன்ற தோனி பெவிலியன் திரும்பினார். இவர் ஒரு சிக்சர், 2 பவுண்டரி உட்பட 27 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். தவான் வீசிய 19வது ஓவரில் மார்கல் வரிசையாக இரண்டு சிக்சர் அடித்து வாண வேடிக்கை காட்டினார். 2 சிக்சர், 3 பவுண்டரி விளாசிய மார்கல் 27 ரன்களுக்கு அவுட்டானார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.
காம்பிர் கலக்கல்: எட்டக் கூடிய இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு சேவக் அதிரடி துவக்கம் தந்தார். நிடினி வீசிய முதல் ஓவரிலேயே சூப்பர் சிக்ஸ் விளாசினார். கோனி வீசிய அடுத்த ஓவரில் இரண்டு சிக்சர் அடித்து வாணவேடிக்கை காட்டினார். மறுபக்கம் சூப்பர் பார்மில் இருக்கும் காம்பிரும் மின்னல் வேகத்தில் ரன் சேர்த்து அசத்தினார். இவரும் பவுண்டரி மழை பொழிந்தார். ஜோகிந்தர் சர்மா வீசிய 7வது ஓவரில் சேவக் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரி அடிக்க... சேப்பாக்கம் அரங்கம் அதிர்ந்தது. அரைசதம் கடந்த சேவக் 71 ரன்களுக்கு(7 பவுண்டரி, 4 சிக்ஸ்) ஜோகிந்தர் பந்தில் வெளியேறி னார். காம்பிர் 50 ரன்களுக்கு(5 பவுண்டரி, 1 சிக்ஸ்) அவுட்டா னார். இதற்கு பின் டிவிலியர்ஸ்(26*), தவான் (19*) இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். மார்கல் பந்தில் தவான் ஒரு பவுண்டரி அடிக்க, டில்லி டேர்டெ வில்ஸ் அணி 19 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை சேவக் பெற்றார்.