இந்தியன் பிரீமியர் லீக்கின் 22-வது இருபதுக்கு 20 போட்டியில், கோல்கத்தா அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் அணி.
மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கோல்கத்தா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களுடன் தோல்வியைத் தழுவியது.
அந்த அணியின் ஹஸ்சி சிறப்பாக பேட் செய்து 71 ரன்களையும், சஹா ஆட்டமிழக்காமல் 59 ரன்களையும் எடுத்து அணியை வெற்றி பெறச்செய்ய கடுமையாக முயன்றனர். ஹஃபீஸ் 13 ரன்கள் சேர்த்தார். கங்குலி, தாஸ், ஹாட்ஜ், ஷுக்லா மற்றும் அகார்கர் ஆகியோர் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான ரன்களையே எடுத்தனர்.
பஞ்சாப் தரப்பில் ஸ்ரீசாந்த், இர்பான் பதான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், விஆர்வி சிங், ககன்தீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
முன்னதாக பஞ்சாப் அணி தனது இன்னிங்ஸ்சில், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் மார்ஷ் 40 ரன்களையும், சங்ககாரா 28 ரன்களையும் எடுத்தனர். இர்பான் பதான் மற்றும் பியுஷ் சாவ்லா ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 24 மற்றும் 21 ரன்கள் சேர்த்தனர்; ஹோப்ஸ் 18 ரன்களையும், யுவராஜ் 17 ரன்களையும் எடுத்தனர்.
கோல்கத்தா தரப்பில் உமர் குல் 2 விக்கெட்டுகளையும், திண்டா, ஹஃபீஸ், ஹஸ்சி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இப்போட்டியில் இர்பான் பதான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்