தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் சொதப்பியது. நேற்றைய லீக் போட்டியில் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை சந்தித்தது.
6 விக்கெட் வீழ்த்திய சோகைல் தன்வீர் ஒட்டுமொத்த சென்னை அணிக்கும் வேட்டு வைத்தார். தொடர்ந்து 5வது வெற்றியை பெற்ற வார்ன் அணி, தொடரில் முதலிடத்துக்கு முன்னேறியது.இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் "டுவென்டி20' தொடர் நடக் கிறது. நேற்று ஜெய்ப்பூரில் நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதிர்ச்சி துவக்கம்: சென்னை அணிக்கு முதல் ஓவரிலேயே "ஷாக்' கொடுத் தார் சோகைல் தன்வீர். வேகத்தில் மிரட்டிய இவர் முதல் பந்தில் பார்த்திவ் படேலை "டக்' அவுட்டாக்கினார். 5வது பந்தில் பிளமிங்கை(0) வெளியேற்றினார். பந்தை அருமையாக "ஸ்விங்' செய்த இவர் 3வது ஓவரில் வித்யூத்தை(5) பெவலியனுக்கு அனுப்பி வைத்தார். அடுத்து வந்த பத்ரிநாத்(15) இரண்டு பவுண்டரி அடித்த கையோடு வாட்சன் பந்தில் நடையை கட்டினார்.
தோனி ஏமாற்றம்: அணியை காப்பார் என எதிர் பார்க்கப்பட்ட கேப்டன் தோனி(1), வார்ன் சுழலில் சிக்கினார். ரூ. 6 கோடிக்கு வாங்கப்பட்ட இவர் ஏமாற்ற, சென்னை அணி 7.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 44 ரன் எடுத்து தத்தளித்தது. இதற்கு பின் ரெய்னா, மார்கல் இணைந்து போராடினர். வார்ன் வீசிய 12வது ஓவரில் மார்கல் இரண்டு பவுண்டரி, 1 சிக்ஸ் உட்பட 17 ரன் எடுத் தார். 6வது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்த ரெய்னா(27), முனாப் பந்தில் வெளியேறினார். இந்த நேரத்தில் மீண்டும் பந்துவீச வந்த தன்வீர் கலக்கினார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த மார்கலை வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார். மார்கல் 42 ரன்கள்(ஒரு சிக்சர், 4 பவுண்டரி) எடுத்தார். இவரது வேகத்தில் "டெயிலெண்டர் களான' முரளிதரன்(0), நிடினியும்(11) சிக்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 ஓவரில் 109 ரன்களுக்கு சுருண்டது.
சூப்பர் ஆட்டம்: போகிற போக்கில் எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ராஜஸ் தான் அணிக்கு ஸ்மித், அஸ் னோட்கர் அசத்தல் துவக்கம் தந்தனர். முதல் விக்கெட் டுக்கு 78 ரன்கள் சேர்த்த நிலையில், அஸ்னோட்கர்(32) அவுட்டானார். அடுத்து வந்த யூசுப் பதான் 8 ரன்களுக்கு முரளிதரன் சுழலில் வெளி யேறினார். பின்னர் ஸ்மித் (35*), வாட்சன் (14*) இணைந்து விரைவாக வெற்றியை உறுதி செய்தனர். வித்யூத் வீசிய 13வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார் வாட்சன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்து சுலப வெற்றி பெற்றது.
முதல் 5 விக்., : பாகிஸ்தானை சேர்ந்த 23 வயதான சோகைல் தன்வீர் கையை வளைத்து மிகவும் வித்தியாசமாக பந்துவீசுவார். ராஜஸ்தான் அணியின் வெற்றி நாயகனாக ஜொலித்த இவர் 4 ஓவரில் 14 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் ஐ.பி.எல்., தொடரில் 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தும் முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். தவிர "டுவென்டி20' வரலாற்றில் மிகச் சிறந்த பந்துவீச்சையும் பதிவு செய்தார்.
சபாஷ் வார்ன் : ஸ்மித் "கேட்ச்' தொடர்பாக கங்குலியை விமர்சித்த கேப்டன் வார்னுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சர்ச்சையை கடந்து தனது அணிக்கு இன்னொரு மகத்தான வெற்றி தேடி தந்துள்ளார். ஹைடன், ஹசி இல்லாத நிலையில் கேப்டன் தோனியால் சாதிக்க முடியவில்லை. தொடர்ந்து இரண்டாவது முறையாக சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளது.