ஸ்பெயின் லீக் கால்பந்து சாம்பியன் பட்டத்தை 31-வது முறையாகக் கைப்பற்றி பெருமை பெற்றுள்ளது ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப். கோப்பைக்கான இறுதிப் போட்டி மாட்ரிட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடைசிவரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஒசாசுனா அணியை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்தது ரியல் மாட்ரிட் அணி.
ஆட்டம் முடிய ஒரு நிமிஷம் இருக்கையில் பதிலி வீரர் கோன்சாலோ ஹுகைன் அடித்த கோல், ரியல் மாட்ரிட்டை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. அதற்கு 2 நிமிஷத்துக்கு முன்னர்தான் எதிரணி அடித்த கோலை ரியல் மாட்ரிட் அணி சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.
பல கோடிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அர்ஜென் ராப்பென் தலையால் முட்டி அந்தக் கோலைப் போட்டார். இதனால் அரங்கில் கூடியிருந்து ரியல் மாட்ரிட் ஆதரவாளர்கள் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தனர்.
ஆட்டத்தின் 83-வது நிமிஷத்தில் பிரான்சிஸ்கோ புனால் அடித்த கோலால், ஒசாசுனா அணி 1-0 என முன்னிலை பெற்றது.
10 வீரர்களுடன் போராட்டம்: டேவிட் பெக்காம், ஃபேபியோ கேப்பெல்லோ, ராபர்டோ கார்லோஸ் ஆகிய நட்சத்திர வீரர்கள் இல்லாமல் ஒசாசுனா அணியை எதிர்கொண்ட ரியல் மாட்ரிட் அணி, ஆட்டத்தின் 46-வது நிமிஷம் முதல் 10 வீரர்களுடன் விளையாடியது குறிப்பிடத்தக்கது. ஃபேபியோ கான்னவாஸ் தவறிழைத்ததால் வெளியேற்றப்பட்டார்.
31-வது வெற்றி: 1931-32-ம் ஆண்டு முதன்முதலாக ஸ்பெயின் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது ரியல் மாட்ரிட். அதுமுதல் 31-வது முறையாக தற்போது பட்டம் வென்று பெருமை பெற்றுள்ளது. 17 முறை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
அதிகபட்சமான பட்டங்களைக் கைப்பற்றிய இரண்டாவது அணியாக பார்சிலோனா கிளப் திகழ்கிறது.