ஐ.பி.எல்., லீக் போட்டியில் நெஹ்ராவின் சூப்பர் பந்துவீச்சு கைகொடுக்க... மும்பை இந்தியன்ஸ் அணி, வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் மும்பை அணி தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. வரிசையாக 5 வெற்றிகளை பெற்று ஆதிக்கம் செலுத்திய வார்ன் அணியின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைத்து அதிர்ச்சி கொடுத்தது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் "டுவென்டி20' தொடர் நாட்டின் பல்வேறு நகரங் களில் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. உடல்தகுதியில் சச்சின் தேறாததால் மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் போலக் ஏற்றார். டாஸ் வென்ற போலக் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
மோசமான துவக்கம்: ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக ஸ்மித், அஸ்னோத் கர் வந்தனர். நிதானமாக ஆட்டத்தை துவக்கிய ஸ்மித் (5), போலக் பந்துவீச்சில் "ஸ்டம்பிங்' செய்யப் பட்டார். அடுத்து "சூப்பர் பார்மில்' இருக்கும் யூசுப் பதான் வந்தார். இவர்(1) வந்த வேகத்தில் நெஹ்ரா பந்தில் அவுட்டாகி, ஏமாற்றினார்.
வாட்சன் அதிரடி: இந்நிலையில் களமிறங்கிய வாட்சன், அஸ்னாத்கருடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி மும்பை பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து அசத்திய இந்த ஜோடி குல்கர்னி வீசிய 6வது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 17 ரன்கள் எடுத்தது. ஜெயசூர்யா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்து வாட்சன் மிரட்டினார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்தநிலையில் வாட்சன், பிராவோ பந்தில் போல்டானார். ஒரு சிக்சர், 4 பவுண்டரி விளாசிய இவர் 20 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்.
ஒரு முனையில் வரிசையாக விக்கெட் விழுந்தாலும் அஸ்னாத்கர் அதிரடியாக விளையாடினார். கைப் (4) மீண்டும் ஏமாற்றினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இளம் ரவீந்திர ஜடேஜா முதல் பந்திலே "டக்' அவுட்டானார். வார்ன் 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இவர்களை தொடர்ந்து நன்றாக விளையாடி கொண்டிருந்த அஸ்னாத் கரும் வெளியேறினார். இவர் ஒரு சிக்சர், 3 பவுண்டரி உட்பட 35 பந்தில் 39 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் 16வது ஓவரை வீசிய நெஹ்ரா வரிசையாக இரண்டு விக்கெட்டை வீழ்த்தி, அசத்தினார். ராஜஸ் தான் ராயல்ஸ் அணி 16.2 ஒவரில் 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக பந்துவீசிய நெஹ்ரா மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
சூப்பர் துவக்கம்: சுலப இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜெயசூர்யா, தகவாலே அதிரடி துவக்கம் தந்தனர். முனாப் வீசிய 4வது ஓவரில் ஜெயசூர்யா ஒரு சூப்பர் சிக்சர் அடித்தார். திரிவேதியின் அடுத்த ஓவரில் தகவாலே ஒரு சிக்சர் விளாசினார். ஜெயசூர்யா 18 ரன் களுக்கு வாட்சன் பந்தில் வீழ்ந்தார். அடுத்து வந்த உத்தப்பா வழக்கம் போல் கலக்கினார். வாட்சன் வீசிய 10வது ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். திரிவேதி வீசிய 13வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். தகவாலே(27), வார்ன் சுழலில் சிக்கினார். பிராவோ(1) வாட்சன் வேகத்தில் வெளியேறினார். பின்னர் அபிஷேக் நாயர், உத்தப்பா இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 104 ரன் எடுத்து வெற்றி பெற்றது. உத்தப்பா(34), நாயர்(12) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை நெஹ்ரா தட்டிச் சென்றார்.