ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் தனக்கு கருணை காட்டும்படி இந்திய கிரிக்கெட் போர்டுக்கு(பி.சி.சி.ஐ.,) ஹர்பஜன் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து இவர் மீதான தண்டனை குறைக்கப் படும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 11 ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்க தடை வதிக்கப் பட்டதால், இம்முறை அபராதம் மட்டும் விதிக்கப்படும் என தெரிகிறது.
மொகாலியில் நடந்த ஐ.பி.எல்., தொடரின் 10வது லீக் போட்டியில் யுவராஜ் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டி முடிந்ததும் பஞ்சாப் அணியின் ஸ்ரீசாந்த் கைகுலுக்க வர, ஆத்திரமடைந்தார் ஹர்பஜன். அவரது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தார். இது தொடர்பாக ஹர்பஜனுக்கு 11 ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்க தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. இவருக்கு ரூ. 3 கோடி வரை இழப்பு ஏற்பட்டது.
தடை வாய்ப்பு?: அடுத்த கட்டமாக இந்திய கிரிக்கெட் போர்டும்(பி.சி.சி.ஐ.,), நடவடிக்கை எடுக்க உள்ளது. ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்த பிரச்னை பற்றி விசாரணை நடத்த வக்கீல் சுதிர் நானா வதியை கமிஷனராக நியமித் துள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஹர் பஜனுக்கு அதிகபட்சமாக வாழ்நாள் தடை விதிக்கப்படலாம். குறைந்தபட்சமாக 5 டெஸ்ட் அல்லது 10 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம்.
பகிரங்க மன்னிப்பு: இந்தச் சூழலில் பி.சி.சி.ஐ.,க்கு ஹர்பஜன் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். இதில், ""களத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீசாந்த் உட்பட அனைவரிடமும் வருத்தம் தெரிவித்தேன். தேவைப் பட்டால் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளேன். எனவே எனது மன்னிப்பை ஏற்றுக் கொண்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக இறுதி வாய்ப்பு வழங்குங்கள்,'' என குறிப்பிட்டு உள்ளார்.
இது பற்றி பி.சி.சி.ஐ., செயலர் நிரஞ்சன் ஷா கூறுகையில், ""ஹர்பஜன் நிறைய கடிதங்கள் அனுப்பியுள்ளார். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. நானாவதியின் அறிக்கைக்கு காத்திருக்கிறோம். இந்த நேரத்தில் கடிதத்தில் உள்ள விபரங்களை தெரிவிப்பது சரியாகாது,''என்றார்.
என்ன காரணம்?: இதற்கிடையே ஹர்பஜன் ஆத்திரமடைய என்ன காரணம் என்பது பற்றி நானாவதி ஆய்வு செய்து வருகிறார். இதற்கு போதுமான ஆதாரங்கள் "வீடியோ' காட்சியில் இல்லை என கூறப்படுகிறது. எனவே சர்ச்சைக்குரிய போட்டியை முழுமையாக பார்க்க திட்டமிட்டுள்ளார். தவிர யுவராஜ், மும்பை அணியின் பயிற்சியாளர் ராஜ்புத் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளார். இவரிடம் நாளை நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை ஸ்ரீசாந்த் மற்றும் ஹர்பஜன் எடுத்துக் கூற உள்ளனர். பின்னர் வரும் 12ம் தேதி அறிக்கையை பி.சி.சி.ஐ., தலைவர் சரத் பவாரிடம் சமர்ப்பிப்பார்.