தில்லியில் நடைபெற்ற ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மிகவும் எதிர்பார்ப்பை பெற்ற இப் போட்டியின் கடைசிப் பந்தில் ஒரு ரன்னைச் சேர்த்து சென்னை அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவ்வெற்றி மூலம் சென்னையில் டெல்லி அணியிடம் பெற்ற தோல்விக்குப் பழிதீர்த்துக் கொண்டுள்ளது தோனி தலைமையிலான சென்னை கிங்ஸ் அணி.
டாஸ் வெற்றி: தில்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இப் போட்டி நடைபெற்றது. "டாஸ்' வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தது.
சென்னை அணியில் 4 பேர் மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். பார்த்திவ் படேல், அனிருதா, ஜோஹிந்தர் சர்மா, நிதினி ஆகியோருக்குப் பதிலாக இலங்கை வீரர் கபுகேதரா, தமிழகத்தின் வித்யுத், அமர்நாத், எல். பாலாஜி ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
தில்லி அணியில் பாட்டியாவுக்குப் பதிலாக மனோஜ் திவாரி விளையாடினார்.
டெல்லி 187-5வி: முதலில் இன்னிங்ûஸத் தொடங்கிய டெல்லி டேர் டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களைக் குவித்தது.
கம்பீர்- தவான் ஜோடியின் ஆட்டம் அணிக்கு முத்தாய்ப்பு சேர்த்தது. இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 121 ரன்களைக் குவித்து சென்னை பந்துவீச்சாளர்களை திணறடித்தது.
கம்பீர் 49 பந்துகளில் 80 ரன்களைக் குவித்திருந்தபோது, தமிழக வீரர் எல். பாலாஜி வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கம்பீரின் எண்ணிக்கையில் ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகள் அடங்கும்.
அதற்கடுத்த ஓவரில் தவான் ஆட்டமிழந்தார். இவர் 46 பந்துகளில் 59 ரன்களைக் குவித்தார். அதில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகள் உள்படும்.
கேப்டன் சேவாக், 18 பந்துகளில் 23 ரன்களைச் சேர்த்து வெளியேறினார்.
பாலாஜி 2 விக்கெட்: முதன்முதலாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்ற தமிழக வீரர் எல். பாலாஜி 35 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதே அளவிலான ரன்களைக் கொடுத்து அல்பி மோர்கெலும் 2 விக்கெட்டுகளைப் பெற்றார்.
கடினமான இலக்கு: ஓவருக்கு 9.4 ரன்களைச் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு ரன்னைச் சேர்த்து பரபரப்பான வெற்றியைப் பெற்றது.
கடைசி ஓவர்: மன்பிரீத் கோனி- பத்ரிநாத் ஜோடி கடைசி ஓவரை எதிர்கொண்டது. 6 பந்தில் 15 ரன்களைச் சேர்த்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையைப் பெற்றிருந்து அணி. பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் கடைசி ஓவரை வீசினார்.
முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டி, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த கோனி, 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி சக வீரர்களின் மனதில் பாலை வார்த்தார். 4-வது பந்தில் பத்ரிநாத் 2 ரன்களைச் சேர்க்க ஸ்கோர் சமன் (187-187) ஆனது. 5-வது பந்தில் அணி வெற்றி பெறமுடியவில்லை. இந்நிலையில் கடைசிப் பந்தை ஓங்கி அடித்து ஒரு ரன்னைச் சேர்த்தார் பத்ரிநாத்.
அணி வெற்றி பெற்றதும் சென்னை கிங்ஸ் வீரர்கள் அனைவரும் மைதானத்துக்குள் ஓடி கோனியையும், பத்ரிநாத்தையும் பாராட்டினர்.
நாயகன் தோனி: இக்கட்டான நிலையில் நிலைத்து ஆடி 33 பந்துகளில் 33 ரன்களைக் குவித்த மகேந்திர சிங் தோனிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
5-வது வெற்றி: சென்னை அணிக்கு இது 5-வது வெற்றியாக அமைந்தது. இப் போட்டிக்கு முன்னதாக நடந்த 3 போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியைத் தழுவிய சென்னை அணி, டெல்லியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி மீண்டும் வெற்றிக் கணக்கைத் தொடங்கியுள்ளது.
அதே சமயம் டெல்லி அணிக்கு இது 3-வது தோல்வியாக அமைந்துள்ளது.
சுருக்கமான ஸ்கோர்:
டெல்லி டெவில்ஸ்: 20 ஓவர்களில் 187-5வி (கம்பீர் 80, சேவாக் 23, தவான் 59, மோர்கெல் 2-35, பாலாஜி 2-35).
சென்னை கிங்ஸ்: 20 ஓவர்களில் 188-6வி (வித்யுத் 40, பிளெமிங் 44, தோனி 33, மோர்கெல் 30, கோனி 13 நாட் அவுட், யோ மகேஷ் 2-40, சங்வான் 2-29).