2007-ம் ஆண்டு "செஸ் ஆஸ்கர்" விருதுக்கு இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கெளரவமிக்க இவ்விருதை 5-வது முறையாக அவர் பெறுகிறார். ரஷியாவைச் சாராத உலக வீரர்களில் அதிகமுறை செஸ் ஆஸ்கர் விருதைப் பெறும் முதல் நபர் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு 1997, 1998, 2003, 2004 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்கர் விருதை அவர் பெற்றுள்ளார்.
உலகில் தலைசிறந்து விளங்கும் வீரர்களை, ஆண்டுதோறும் கெüரவித்து வருகிறது ரஷியாவில் உள்ள "செஸ் மாகஜின்-64' அமைப்பு. 1967-ம் ஆண்டு முதல் இவ்விருதை வழங்கி வருகிறது.
உலகில் நடைபெறும் முக்கியப் போட்டிகளில் வீரர்கள் வெளிப்படுத்தும் திறமையை அடிப்படையாகக் கொண்டு, விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து வருகிறது. செஸ் விமர்சகர்கள், ஆய்வாளர்கள் என 130 வல்லுநர்கள் விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
அதன் அடிப்படையில் ஆனந்த் 2007-ம் ஆண்டுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், கடந்த ஆண்டு உலகின் நம்பர்-1 வீரராக உயர்ந்ததுடன், மெய்ன்ஸ் கிளாஸிக் பட்டத்தை 10-வது முறையாகவும், லியான் போட்டியில் 7-வது முறையாகவும் பட்டம் வென்றார்.