ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் கொல்கத்தா அணி, டெக்கானை வீழ்த்தியது.
32-வது ஆட்டம்
இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) சார்பில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடந்து வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். ஒரு அணி மொத்தம் 14 லீக் ஆட்டத்தில் விளையாடும். இதில் 8-ல் வெற்றி பெற்றால் அரைஇறுதிக்கு நுழைந்து விடலாம்.
இந்த நிலையில் தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று மோதின. ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடந்தது. காயத்தில் இருந்து டெக்கான் கேப்டன் வி.வி.எஸ்.லட்சுமண் குணமடையாததால் கில்கிறிஸ்ட் கேப்டனாக செயல்பட்டார். 3-வது குழந்தை பிறந்ததால் நாடு திரும்பிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் வாஸ் மீண்டும் டெக்கான் அணிக்காக களம் இறங்கினார்.
கங்குலி-ஹஸ்ஸி அதிரடி
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கங்குலி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சல்மான் பட் 4 ரன்னிலும், ஆகாஷ் சோப்ரா 24 ரன்னிலும் ஆட்டம் இழந்தார்கள். இதன் பின்னர் கேப்டன் கங்குலியுடன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் ஹஸ்ஸி ஜோடி சேர்ந்தார். இந்த இணை டெக்கான் பவுலிங்கை சின்னாபின்னப்படுத்தியது. 40 பந்தில் அரை சதத்தை கடந்த கங்குலி அதன் பிறகு விசுவரூபம் எடுத்தார். ஓஜா, ஸ்டைரிஸ் ஓவர்களில் தலா 2 சிக்சர் தூக்கி அசத்தினார். டேவிட் ஹஸ்ஸியின் ஆட்டத்திலும் அனல் பறந்தது. இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. இந்த தொடரில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை கங்குலி பெறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில் 9 ரன்னில் சதத்தை தவற விட்டார். கங்குலி 91 ரன்களில் (57 பந்து, 11 பவுண்டரி, 5 சிக்சர்) குவித்து கேட்ச் ஆனார். கங்குலி-ஹஸ்ஸி ஜோடி 48 பந்துக்கு 102 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து தைபு 9 ரன்களில் அவுட் ஆனார்.
20 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. இந்த தொடரில் கொல்கத்தா அணி 200 ரன்களை கடப்பது இது 2-வது முறையாகும். டேவிட் ஹஸ்ஸி 57 ரன்களுடனும் (29 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), சுக்லா 14 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். கடைசி 7 ஓவர்களில் மட்டும் கொல்கத்தா அணி 115 ரன்கள் சேர்த்தது.
டெக்கான் தோல்வி
தொடர்ந்து ஆடிய டெக்கான் அணி தொடக்கத்திலேயே அதிர்ந்தது. கிப்ஸ் 4 ரன்களில் ஏமாற்றினார். அதன் பிறகு கேப்டன் கில்கிறிஸ்ட் (24 ரன்) ஆட்டம் இழந்ததும் அந்த அணியின் நம்பிக்கை தகர்ந்தது. இருப்பினும் இறுதி கட்டத்தில் வேணுகோபால் ராவின் அதிரடி, ஆட்டத்தின் போக்கில் லேசான பரபரப்பை உண்டாக்கியது. முரளிகார்த்திக்கின் ஒரு ஓவரில் மட்டும் 3 பிரமாதமான சிக்சர்களை விரட்டி உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். அவரது வேகமான ஆட்டம் தோல்வி வித்தியாசத்தை குறைக்க உதவியதே தவிர, கொல்கத்தா அணியின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியவில்லை.
வெற்றிக்கு கடைசி ஓவரில் 33 ரன்கள் தேவைப்பட்ட போது, அதில் 9 ரன்கள் மட்டுமே டெக்கான் அணியால் எடுக்க முடிந்தது. 20 ஓவர்கள் முடிவில் டெக்கான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
டெக்கான் அணியில் கடைசி வரை போராடிய வேணுகோபால் ராவ் 71 ரன்கள் (42 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார். கொல்கத்தா கேப்டன் கங்குலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
4-வது வெற்றி
கொல்கத்தா அணிக்கு இது 4-வது வெற்றியாகும். அதே சமயம் 9-வது ஆட்டத்தில் ஆடிய டெக்கான் அணி சந்தித்த 7-வது தோல்வியாகும். இதன் மூலம் டெக்கான் அணியின் அரைஇறுதி வாய்ப்பு மங்கி இருக்கிறது. டெக்கான் அணி மட்டுமே சொந்த ஊரில் இன்னும் வெற்றி பெறாமல் உள்ளது. அந்த அணி சொந்த ஊரான ஐதராபாத்தில் விளையாடிய 4 ஆட்டத்திலும் தோற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் போர்டு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சல்மான் பட் (சி) கில்கிறிஸ்ட் (பி) வாஸ் 4
சோப்ரா (ரன்-அவுட்) 24
கங்குலி (சி) ஆர்.பி.சிங் (பி) விஜய்குமார் 91
ஹஸ்ஸி (நாட்-அவுட்) 57
தைபு (சி) ரவிதேஜா (பி) ஆர்.பி.சிங் 9
சுக்லா (நாட்-அவுட்) 14
எக்ஸ்டிரா 5
மொத்தம் (20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு) 204
விக்கெட் வீழ்ச்சி: 1-4, 2-73, 3-175, 4-190
பந்து வீச்சு விவரம்
வாஸ் 3-0-36-1
விஜய்குமார் 3-0-21-1
ஸ்டைரிஸ் 3-0-28-0
ஆர்.பி.சிங் 4-0-59-1
வேணுகோபால் 4-0-24-0
பங்கர் 1-0-10-0
ஓஜா 2-0-25-0
டெக்கான் சார்ஜர்ஸ்
கில்கிறிஸ்ட் (சி) கங்குலி (பி) திண்டா 24
கிப்ஸ் (சி) சல்மான் பட் (பி) திண்டா 5
ரவிதேஜா (சி) சகா (பி) உமர்குல் 10
ரோகித் ஷர்மா (சி) கங்குலி (பி) திண்டா 33
ஸ்டைரிஸ் (சி) சுக்லா (பி) கங்குலி 5
வேணுகோபால் ராவ் (நாட்-அவுட்) 71
பங்கர் (சி) சோப்ரா (பி) கங்குலி 2
வாஸ் (பி) சுக்லா 9
ஆர்.பி.சிங் (நாட்-அவுட்) 6
எக்ஸ்டிரா 16
மொத்தம் (20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு) 181
விக்கெட் வீழ்ச்சி: 1-12, 2-41, 3-41, 4-63, 5-95, 6-123, 7-161
பந்து வீச்சு விவரம்
திண்டா 4-0-33-3
இஷாந்த் ஷர்மா 3-0-27-0
உமர்குல் 4-0-43-1
கஙகுலி 4-0-25-2
முரளிகார்த்திக் 3-0-29-0
சுக்லா 2-0-16-1