ஐ.பி.எல்., தொடரில் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்று ஜெய்ப்பூரில் நடந்த பரபரப்பான லீக் போட்டியில் வாட்சன் துõள் கிளப்ப, சேவக்கின் டில்லி டேர்டெவில்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வார்ன் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
சேவக் ஏமாற்றம்: வழக்கத்துக்கு மாறாக மந்தமாக ஆடிய சேவக் 17 ரன் களுக்கு(20 பந்தில்) வாட்சன் பந்தில் வீழ்ந்தார். அருமையான பார்மில் இருக்கும் காம்பிர் மட்டும் பவுண்டரிகளாக விளாசி நம்பிக்கை தந்தார். இவர் திரிவேதி பந்தில் 31 ரன்களுக்கு போல் டாக சிக்கல் ஏற்பட்டது.
மாஸ்கரானஸ் அபாரம்: இந்த நேரத்தில் 14வது ஓவரை வீசிய மாஸ்கரானஸ் கலக்கினார். டிவிலியர்ஸ்(20), தினேஷ் கார்த்திக்கை(13) அவுட்டாக்கினார். பின்னர் இலங்கை வீரர்களான தில்ஷன், மகரூப் இணைந்து அதிரடியாக விளையாடி கைகொடுத்தனர். வார்ன் வீசிய 19வது ஓவரில் மகரூப் நான்கு சிக்சர்கள் விளாச... மொத்தமாக 27 ரன் கிடைத்தது. மகரூப் 16 பந்து களில் 39 ரன்கள்(4 சிக்சர், 2 பவுண்டரி) விளாசினார். டில்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.
மெக்ராத் துல்லியம்: சுலப இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் அணி துவக்கத் தில் திணறியது. மெக்ராத் மிகவும் கஞ்சத்தனமாக பந்துவீசினார். முதல் 3 ஓவரில் 6 ரன் மட்டுமே கொடுத்தார். கடந்த போட்டியில் கலக்கிய யூசுப் பதான்(8) இம்முறை பரிதாபமாக ரன் அவுட்டானார். சிறிது நேரத்தில் சேவக்கின் துல்லிய "த்ரோவில்' கைப்(1) ரன் அவுட்டாக, நெருக்கடி ஏற்பட்டது. இதற்கு பிறகு ஸ்மித், வாட்சன் இணைந்து அசத்தலாக ஆடினர். மகேஷ் வீசிய 7வது ஓவரில் வாட்சன் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். ஸ்மித் 24 ரன்களுக்கு வெளியேறினார்.
வாட்சன் உறுதி: ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுபக்கம் தனது அதிரடியை தொடர்ந்தார் வாட்சன். ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்ட இவர் மிஷ்ரா வீசிய 15வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். சேவக் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்சர் அடித்தார். இவர் சர்ச்சைக் குரிய முறையில் 74 ரன் களுக்கு(5 பவுண்டரி, 5 சிக்சர்) ரன் அவுட்டானார். கடைசி ஓவரில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. மகேஷ் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் ராவத் பவுண்டரி அடிக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து இன்னொரு சுலப வெற்றியை பெற்றது. ஆட்ட நாயகனாக வாட்சன் தேர்வு செய்யப் பட்டார்.
ரன் அவுட் சர்ச்சை : மகரூப் வீசிய 19வது வீரர் பரபரப்பு ஏற்படுத்தியது. முதல் பந்தில் வார்ன் அவுட்டானார். இரண்டாவது பந்தில் ஒரு ரன்னுக் காக ஓட முற்பட்டார் வாட்சன். அதற்குள் பந்தை பெற்ற விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் "ஸ்டம்ப்சை' தகர்த்தார். ஆனால் அம்பயர் ஸ்டீவ் டேவிஸ் "அவுட்' தர மறுத்தார். "ரீப்ளேயில்' வாட்சன் அவுட் என்பது தெளிவாக தெரிந்தது. உடனே இன்னொரு அம்பயர் ரூடி கோயர்ட்சனிடம் டில்லி கேப்டன் சேவக் புகார் கூற, மூன்றாவது அம்பயரிடம் கேட்கப்பட்டது. இதில் வாட்சனுக்கு ரன் அவுட் கொடுக்கப்பட்டது. இதற்கு முன் ஸ்மித் "கேட்ச்' தொடர்பாக கங்குலி சர்ச்சை கிளப்பினார். தற்போது சேவக்கும் களத்தில் இருக்கும் அம்பயரை, மூன்றாவது அம்பயரிடம் கேட்கும்படி நிர்ப்பந்தித்துள்ளார். இதனால் மீண்டும் ஒரு சர்ச்சை வெடிக்கலாம்.