பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி வீரர்கள் தேர்வில் ராகுல் டிராவிட்டையும், சரு ஷர்மாவையும் நம்பியது பெரும் தவறாகிவிட்டது என்று அந்த அணியின் உரிமையாளர் விஜே மல்லைய� கூறியுள்ளார்.
இது குறித்து பெங்களூரில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த மல்லையா, கிரிக்கெட்டில் தனக்கு போதிய அனுபவம் இல்லாததால் அணித்தேர்வில் தலையிடவில்லை. அணித்தலைவர் ராகுல் டிராவிட்டும், தலைமை நிர்வாகி சாரு ஷர்மாவும்தான் முடிவுகளை மேற்கொண்டனர்.
டிராவிட்டையும், சாருவையும் நம்பியது மாபெரும் தவறாகிவிட்டது. அணியின் இறுதிப் பட்டியலை பார்த்துவிட்டு, டெஸ்ட் அணி போன்று உள்ளது என்று எனது நண்பர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் அணியை தேர்வுசெய்த இருவரின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறேன். எஞ்சிய போட்டிகளிலாவது டிராவிட் வெற்றியை ஈட்டித்தருவார் என்று மல்லையா கூறியுள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் முடிவின்போது 33 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி (நேற்று இரவு நடைபெற்ற பெங்களூர்பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவு உள்ளடக்கப்படவில்லை) 2 ஆட்டங்களில் மாத்திரமே வெற்றியீட்டி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் பெங்களூர் அணியின் தலைமை நிர்வாகி சாரு ஷர்மாவுக்கு பதிலாக முன்னாள் டெஸ்ட் வீரர் பிரிஜேஷ் படேல் நியமிக்கப்பட்டார்.
பெங்களூர் அணியை 111.6 மில்லியன் டொலர்கள் கொடுத்து விஜே மல்லையா ஏலத்தில் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.