மொஹாலியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்று அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை முற்றிலும் இழந்தது பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி. இனி பெங்களூர் அணி விளையாடும் போட்டிகள் வெறும் சம்பிரதாய ஆட்டமாகவே இருக்கும்.
முன்னதாக டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட் செய்தது. திராவிட், பெüச்சர், மிஸ்பா-உல்-ஹக் ஆகிய வீரர்கள் இருந்தும் அந்த அணியால் ரன்களை உயர்த்த முடியவில்லை. தொடக்க ஆட்டக்காரர் அருண்குமார் ஒரு ரன்னில் அவுட்டானார். அதன் பிறகு கோஹ்லியும் மிஸ்பாவும் ஜோடி சேர்ந்து ஓரளவு ரன்களை உயர்த்தினர். மிஸ்பா 8 பந்துகளில் 21 ரன்களைக் குவித்து அவுட்டானார். அதன்பிறகு வொயிட் 10 ரன்களுக்கும், கோஹ்லி 21 ரன்களுக்கும் அவுட்டாயினர்.
திராவிட் 29 ரன்களும், பெüச்சர் 39 ரன்களும் எடுத்து அவுட்டாயினர். அதன் பிறகு வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர். பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது.
பஞ்சாப் அணியில் ஸ்ரீசாந்த் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய பஞ்சாப் லெவன் அணி 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மார்ஷ் அவுட்டாகாமல் 74 ரன்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.